இரெண்டு நாட்கள் முன்பு, அபுதாபியில் ஒரு
தமிழ் பாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் குழந்தைகள் குழுக்களாய் பாட வேண்டும்…குழுவில்,
சிலர் கருவி இசைக்க, 4-5 குழந்தைகள் பாடுவர். இது விதியாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.
அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்
கூறியது என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது….அந்த தாக்கம் இன்றும் என் மனதில்
ஒரு நெருடலாய் நீடிக்கிறது.
15-20 குழுக்கள் போட்டியிட்டனர். அமீரகத்தில்
பாடத் தெரிந்த குழந்தைகள் இவ்வளவுதானா என்ற எண்ணத்தில் நான் இருந்த பொழுது, தொகுப்பாளர்
பேசினார். அந்த பேச்சு என் கேள்விக்கு விடையளித்ததோடு……..
சில பெற்றோர்கள் போட்டி ஒருங்கினைப்பாளரிடம்
“தமிழ் பாடல்கள் பாட என் குழந்தைக்குத் தெரியாது ; வேறு பாடல்கள் பாடலாமா ?” எனக் கேட்க,
இந்த நிகழ்ச்சி தமிழ் பாடல்கள் பாடுவதற்கு மட்டுமே என்ற பதில் கேட்டு போட்டியிலிருந்து
விலகி விட்டார்களாம். “ஏன்….வேறு மொழி பாடினால் என்ன ? கெட்டா போய் விட்டது” என மனதினுள்
முனங்கிய படி சென்றிருப்பார்கள் அந்த பெற்றோர்கள்….அதை என்னால் மனத்திரையில் காண முடிந்தது.
இது ஒரு புறம்.....
இன்னும் சிலர் தங்கள் குழந்தைகள்
Jeans – T-shirt அணிந்து போட்டிக்கு வரலாமா எனக் கேட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வினை
நடத்துவதற்கான நோக்கம், தமிழ் கலாச்சாரம் என்று ஒன்று இருக்கிறது….அதன் படி, சிறிய
குழந்தைகள் (பெண்கள்) பாவாடைச் சட்டையிலும், பெரிய பெண்கள் தாவனியிலும் வர வேண்டும்
என்பதும் விதி எனக் கூறியிருக்கிறார்கள். அதற்கு அந்த பெற்றோர்கள், எங்கள் குழந்தைகளுக்கு,
அந்த மாதிரி உடை அணிந்து பழக்கம் இல்லை எனக் கூறி விலகியிருக்கிறார்கள்.
அந்த தொகுப்பாளர் இந்த இரெண்டாவது செய்தியைக்
கூறிவிட்டு, “பெற்றோர்களாகிய நாம், தமிழ் ஆடைகளை பற்றி, ஏன் நம் குழந்தைகளிடம் கூறுவதில்லை…..பெரியவர்களாகிய
நமக்கு, அந்த கடமை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. கடமையை உணரலாமே……தமிழ் சார்ந்த ஆடையை
நாம் வெளிநாடுகளில் இருக்கும் பொழுது அணிவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த வாய்ப்பு வரும்
பொழுதும், ஆடையை காரணம் சொல்லி, சில குழந்தைகள் பங்கேற்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது”
என சொல்லி முடித்தவுடன், மனது வலிக்கத் தான் செய்தது.
பெற்றோர்களிடம் இந்த விளக்கத்தை சொல்லும்
போதும், சொன்ன பிறகும் போட்டி ஒருங்கினைப்பாளர்கள் எத்தனை விமர்சனத்துக்கு ஆளாகியிருப்பர்
?
கலாச்சாரம் ஒரு மறந்து போன பொருளாகி விட்டது.
அதனை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டாம் ; மறந்து விடாமல் இருக்கலாமே…..பெற்றவர்கள் போன்றது
கலாச்சாரம். புதிய உறவுகள் எத்தனை வந்தாலும், பெற்றவர்களை மறக்க முடியுமா ? நம் கலாச்சாரத்தை,
எங்கிருந்தாலும், பாதுகாப்பது, அழிய விடாமல் காப்பது, நமது கடமையில்லையா ?? நம் கலாச்சாரத்தில்
நமக்கு அசிங்கமா ?
மனதின் வலி இன்னும் குறையவில்லை……