24 அக்டோபர், 2012 மாலையிலிருந்தே மறு நாளிலிருந்து
தொடங்கும் 3 நாள் விடுமுறையை கழிக்கும் ஆர்வத்தில் மனது… மாலை சுமார் ஐந்து மணியளவிலிருந்து
அலை பேசி தொடர்பில் நண்பன் தேவாவுடன்….
தேவாவின் குடுமபமும் என் குடுமபமும் சேர்ந்து இந்த
ஈத் விடுமுறையில் அபுதாபி மற்றும் அல் ஐன் போய் வரலாம் என்று பேசி வைத்திருந்தோம்.
கடந்த காலத்தில் வருங்காலம் பற்றிய பேச்சுக்கள் இருந்ததை ஏனோ மனது நினைத்தது. அலை பேசியில்
அழைத்த முதல் முறை நன்பனிடமிருந்து ஏற்பு இல்லை. ஒரு வேளை நன்பனின் அலுவல் காரணமாய்
பேசிய திட்டம் செயல் படுத்த முடியாமல் போய் விடுமோ ? மின்னலாய் தோன்றிய எண்ணத்தைப்
பின் தள்ளிவிட்டு அலை பேசியில் மீண்டும் முயற்சி… 2-3 முறை கழித்து ‘ஹலோ… சொல்லுங்கண்ணா’
என்று முதல் முறையாய் தொடர்பு கொள்பவருக்கு பதில் அளிக்கும் தொனியில் நண்பனின் குரல்…
சோர்வின் நெடியுடன். என்னடா ஆச்சு? நாளைக்கு ப்ரோக்ராம்…. என்று ஒரு வித தயக்கத்துடன்
இழுத்த நொடியில்… எல்லாம் நல்ல படியாய் இருக்க
வேண்டுமே என்று மனது துடிக்கத் தொடங்கியது. கொஞ்சம் டென்ஷன்… வேலை இருக்கு… அப்புறம்ணா…
வண்டி எடுப்பதாய் இருந்தால் 3 நாட்களுக்கு எடுக்கச் சொல்கிறார்கள்… உங்களுக்கு தெரிந்த
இடத்தில் விசாரிங்க.. வேலை முடிச்சுட்டு கூப்பிடறேன்.. நானும் பாக்கறேன்… பேசலாம் என
சொல்லி என் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்பை துண்டித்தான். அவனின் வேலை நெருக்கடி விளங்கியது.
எங்களின் தேவை ஒரு நாளுக்கு வண்டி. என்னுடைய ஆபிஸில்
விசாரிக்கத் தொடங்கினேன். விசாரிக்கும் பொழுதில் முழு திட்டத்தையும் சொல்ல வேண்டியிருந்தது.
அனைவரும் தங்களின் திட்டத்தை செயல்படுத்தும் ஆர்வத்தில் இருந்தனர். அவர்களிடம் சொல்லவும்
வேண்டும்… ஆனால் கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை….. சாதாரண நேரத்தில், தங்கள் முழு
கவனத்தையும் அடுத்தவர் சொல்வதில் வைக்கும் சிலர் கூட, அன்றைய தினத்தில்…. தேவையானதை
சொல்லியும் சொல்லாமலும் ஒரு சிலரது தொடர்பினை வாங்கினேன். தொடர்பும் கொண்டேன். சொல்லி
வைத்தாற் போல, எல்லா இடத்திலும் ஒரே பதில்… ‘இல்லை’. சரி… பார்க்கலாம்… இந்த மூன்று
நாட்களும் வீட்டில் தான் போலிருக்கிறது என மனதை சமாதானம் செய்து கொண்டு, விவரத்தை சொல்வதற்கு
நன்பனின் எண்ணை தட்டிய போது, நன்பனின் அலை பேசி switch off செய்யப் பட்டிருந்தது. நன்பனின்
மற்றொரு எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சி செய்த பொழுது, சொல்லுங்கண்ணா என்ற பதில் கேட்டது.
மனதில் ஏனோ கோபம் வந்தாலும், அப்பாட… என்ற உணர்வும் இருந்தது.
நான் பேச வேண்டியதை சொல்லத் தொடங்கினேன்… அவசரமாய்
நான் பேசியதை கேட்டுவிட்டு, நான் திரும்பக் கூப்பிடறேன்.. ஒரு நம்பர் தர்ரேன்.. கால்
பண்ணிட்டு சொல்லுங்க என்று தொடர்பினை துண்டித்தான். இந்த முறையும் அவன் குரலில் நெருக்கடியின்
நெடி இருந்தாலும், போன தடவையை விட கம்மியாய் இருந்ததாய் பட்டது. என்னை நானே தேற்றிக்
கொள்ள நானே நினைத்துக் கொள்கிறேனோ? அவனுக்கு எல்லாம் சரியாய் இருக்க வேண்டும்… சரியாகி
விடும்… அந்த பொழுதில் என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு, அவன் கொடுத்த எண்ணை தொடர்பு
கொண்டேன். ஒரு நாளைக்கு வண்டி இருக்கிறதென்று சொன்னார்கள். விநாடி நேர சந்தோஷம்.
15 நிமிடத்திற்குள் confirm செய்ய சொன்னார்கள்… சந்தோஷம் பறந்து போனது….
பின்ன இருக்காதா… நண்பன் அலை பேசியை எடுக்க வேண்டும்…
வேலை நிமித்த பளு குறைந்திருக்க வேண்டும்…. நண்பனின் அலை பேசியில் சப்தம் வந்தது.
4 முறை மணியோசை கேட்டது. ஒவ்வொரு முறையும் நெஞ்சில் தடக் தடக் என்ற சப்தம் மணியோசையை
விட அதிகமாக இருந்தது. தடக் தடக் சப்தத்தில், நண்பனின் குரல் கேட்காமல் போய்விடுமோ
என்ற பயம் வேறு….நண்பனின் குரல் கேட்டது. சுத்தமாய் பேசினான்.. எப்பொழுதும் போல். என்னவென்று
தெரியாதெனினும், எல்லாம் சரியாகிவிட்டதா என்றேன். ஆமாண்ணா.. முடிந்தது என்றான். அவனின்
நிம்மதி பேச்சில் தெரிந்தது. எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது – என் நண்பனுக்காக….
முடிவு செய்தோம். Rent a carக்கு confirm செய்தேன்.
பத்து நிமிடம் கழித்து, மீண்டும் அழைத்தான் தேவா.
இந்த முறை, எப்படி காரை எடுப்பது என்பது பற்றி சம்பாஷனைகள் கார் எங்கள் வீட்டில் கொண்டு
வந்து கொடுப்பார்களா? இல்லை நாங்கள் சென்று வாங்குவதா என்று… ஒரு வழியாய் நாங்களே சென்று
வாங்கிக் கொள்வது என்று முடிவு செய்தோம்.
இன்னும் பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் தேவாவின்
அழைப்பு. நம்பர் பார்த்தவுடன், அலைபேசியை எடுத்தேன். அண்ணா, ஒரு சூப்பர் ஆஃபர்ண்ணா…
ஒரு நாள் வாடகையில், 1.5 நாட்களுக்கு வண்டி கிடைக்கும். ஆனால், வியாழன் மாலை 4 மணிக்கு
எடுத்தால் சனிக்கிழமை காலை 9 மணிக்கு திரும்பக் கொடுத்தால் போதும் என்று அந்த கார்
கம்பெனியின் விற்பனை பிரதிநிதியுடன் கான்ப்ரன்ஸ் செய்தான். அது வேண்டாம் என்று விளக்கிச்
சொல்ல தேவாவும் அரை மனதுடன் ஒப்புக்கொண்டான்…
இரவின் மடியில் தூக்கம் நாளைய கனவுகளுடன்… எத்தனை
முறை விடுமுறையில் சுற்றினாலும், சின்ன குழந்தை போல ஒவ்வொரு முறையும் அலை பாயும் மனது…
அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு கிளம்புவதாய் திட்டம்…
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzLHd5PwVXBhuv1yQ_gDTgkJFL5zZpK6Q6mF4AsLqND622diKZihLEQAHA4kDe8Pv2Og2-UO-rze0RFhgYCE8XVczYdO-RyfVE_QMw2To1RscG94AegdhZM090j7Uduf71rvLZ7Bbm3JI/s320/HD.jpg)
குழந்தைகள் எழுந்திருக்க வேண்டும் ; வேகமாய் கிளம்ப
வேண்டும்… தேவா நேரத்தில் வர வேண்டும்… அடுத்த நாள் என்ன நடந்தது ?? அடுத்த பகுதியில்….
அடுத்த பகுதியை அறிய ஆவல்...
ReplyDeleteதொடர்கிறேன்...
நன்றி...