Grand Mosque, Abudhabi
இரெண்டு நுழைவாயில் மூடப்பட்டிருந்தாலும் மனது மூடவில்லை…
இன்னும் கொஞ்சம் முன்னேறினோம்… ஒரு வளைவை தாண்டிச் சென்ற போது வாயில் இருந்தது… திறந்து!
ஒரு காவலாளி கண்ணில் பட்டார். ஆனாலும் மனிதர்களின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.வண்டியை
நிறுத்துவதற்கான இடமும் கண்ணில் படவில்லை. வண்டியை நிறுத்தி காவலாளியிடம் கேட்கலாம்
என்று எண்ணி நான் இறங்கினேன்.முன்னே ஒரு Taxi.. அதிலிருந்து இறங்கியவர்கள் இந்தியர்கள்
இல்லை; அவர்களிடம் கேட்கலாமா என்று தோன்றிய எண்ணத்தை மாற்ற கட்டாயப் படுத்தப்பட்டேன்..
காரணம் – அவர்கள் வேறொரு Taxiயில் ஏறிக் கொண்டிருந்தனர். காவலாளியை நோக்கிய பொழுது
அவர் கை அசைத்துக் கொண்டிருந்தார்… இல்லை என்கிறாரா? மனதளவிலான நம்பிக்கை மட்டும் துளிர்
விட்டுக் கொண்டிருந்தது…. அருகில் சென்று அவரிடம் கை அசைத்து பேசிவிட்டு,கேட்டுவிட்டு
திரும்பினேன். வண்டியில் இருக்கும் தேவா மற்றும் தாய்குலங்களின் முகத்தில் எதிர்பார்ப்பு…
‘இன்று மசூதி இல்லை’ என்ற சொல் வரக்கூடாதே என்ற கவலை… குழந்தைகளும் அதே எதிர்பார்ப்புடன்
மற்றொரு மலையாளம் பேசும் குடும்பமும் அதே நிலைப்பாடில்;அந்த
வண்டியிலிருந்து இறங்கியவர் என்னிடம் பேசி விட்டு அவர் வண்டியை நோக்கி நகர்ந்தார்.
என்னுடன் வந்தவர்களிடம் சொல்லாமல் முதலில் அடுத்தவரிடம் சொல்லிவிட்டேனே.. 2-3 நிமிடத்துக்குள்
ஏகப்பட்ட மன நிலை மாற்றங்கள்;சிந்தனைகள்.நான் கூடுமானவரை என் முகத்தை உயர்த்தாமல் நடந்து
கொண்டிருந்தேன். காரினை அடைய பத்தடி தூரம் இருக்கும் பொழுது, என்னால் என் உணர்வினை
கட்டுப்படுத்த முடியாமல், தலையை உயர்த்தினேன்… அத்தோடு என் வலது கை கட்டை விரலையும்…
என்னுடன் வந்தவர்களுக்கு கேட்காது எனத் தெரிந்தும் ‘அடுத்த வாயில் வழியாய் செல்ல வேண்டும்’
என சொல்லிக் கொண்டிருந்தேன். கைகளையும் அசைத்துக் கொண்டு… அருகில் வந்து, மீண்டும்
சொன்னேன்… அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி… என்னையும் சேர்த்து… ஏதோ நான் தான் இதற்கு
காரணம் போலவும், சாதித்து விட்டது போலவும்… கடைசி ஓவரில் 18 ரன்களை இந்திய அணி அடித்து
வெற்றிப் பெறுவதை தொலைக் காட்சியில் பார்க்கும் பொழுது தோன்றுமே அதைப் போல…
காரினில் ஏறி, தெற்கு வாயிலை நோக்கி சென்றோம்.ஏனோ
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நினைவில் வந்தது… பல வாயில்கள் இருப்பதனாலோ ? தெற்கு
வாயிலின் வழியே சென்று ‘Parking’ல் நுழைந்து காரை நிறுத்திய சமயத்தில், என்னிடம் போன
வாயிலில் பேசியவர் எங்கள் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிக் கொண்டிருந்தார்.
அவர் என்னைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்த மாதிரி தோன்றியது.காரிலிருந்து இறங்கி,
எப்படி போக வேண்டும் என்று சுற்றும் முற்றும் பார்த்து, ‘Way to Escalator’ என்ற போர்டைப்
பார்த்து அந்த வழியே சென்றோம்…
மீண்டும் இடது பக்கம் திரும்பினால், மசூதியின் முன்
புறத் தோற்றம் பிரம்மாண்டமாய் தென்பட்டது. நாங்கள் ஒரு ஓரத்தில் நிற்பதாய் பட்டது.
நடை தொடர்ந்தது. Square வடிவத்தில் தண்ணீர் தொட்டி… நீச்சல் குளம் போல தென்பட்டது.
அருகே சென்றோம்.. தண்ணீரை தொட்டோம்.2 அடி ஆளம் தான் இருக்கும்…அதில் மசூதியில் இருக்கும்
விதானத்தின் பிம்பம் தெரிந்தது.. மொத்தம் 80 விதானங்கள். உண்மை சொல்லட்டுமா ? ஒவ்வொன்றாய்
கனக்கு செய்யவில்லை… வலை தளத்திலிருந்து எடுத்தது…ஒரு வழி தென்பட்டது…பலர் அதன் வழியே
சென்று கொண்டிருக்க, நாங்களும் தொடர்ந்தோம்… அவர்களைப் போல, நாங்களும் வழி மறிக்கப்
பட்டோம். புர்க்கா கிடைக்கும் இடத்தை கை நீட்டி ஒருவர் சொல்ல, வெளியே வந்தோம் – சுவரில்
எறியப்பட்ட பந்து திரும்புவது போல. அந்த தண்ணீர் குளத்தை மீண்டும் ரசித்தபடியே வலம்
வர தொடங்கினோம்…

அனைவரும் மெதுவாய் உள்ளே சென்றோம்…மூடிய முகப்பு…குறுகிய
நீளமான பாதை… சுவர் முழுவதும் வேலைப்பாடுகள்.தூண்கள்…மதி மயங்கி ரசித்து நின்றோம்.வியந்தபடி
அந்த மூடிய முகப்பை தாண்டி வந்தோம். வெட்டை வெளி.. நடக்க ஏதுவாய் பெரிய பெரிய பளிங்கு
கற்கள். திரும்பிய இடமெல்லாம் திடுக்கிட வைக்கும் பிரம்மாண்டம்… மசூதியின் தோற்றம்
மெதுவாய் எங்கள் அருகில் வரத் தொடங்கியிருந்தது…இல்லை இல்லை…நாங்கள் மசூதியின் அருகே
சென்று கொண்டிருந்தோம்…
செருப்புகள் வைப்பதற்கான பெட்டிகள்.. பார்த்துக்
கொள்ள ஆட்கள் இல்லையா என்று இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு அப்போது தான் வந்தவர்கள்
கேட்டிருப்பார்கள்.. காலணிகலை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு உள்ளே சென்றோம்.
அப்போது தான் பார்த்தோம்… மசூதியின் உள்ளே நிறையபேர். இதன் வெளிப்பாடு வெளியில் ஏன்
தெரியவில்லை என்று வியந்தபடி நகர்ந்து கொண்டிருந்தோம்.
எத்தனை தூண்கள்…சுவரெங்கிலும் வேலைப்பாடுகள்…அன்னாந்து
பார்த்தால் பெரிய விளக்கு..கண்களுக்குத் தான் பெரிய பிரச்சனை.எதை முதலில் பார்ப்பது
என்பதில் தொடங்கி எப்படி பார்ப்பது வரை… மூன்று பெரிய விளக்குகள்.கால் பளிங்கில் படவில்லையே
என்ற சுரனை வருவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.கீழே கார்பெட்.. 8000 பேர் வரை உள்ளே
இருந்து தங்கள் பிரார்த்தனைகளை செய்ய முடியுமாம். அத்தனை பெரிய இடம் முழுவதும் ஒரே
கார்பெட்டால்… கையால் செய்யப்பட்டது. 2 லட்சத்திற்கும் மேலான முடிச்சுகளைக் கொண்டது.
ஆங்காங்கே சூரிய வெளிச்சம் படும்படி அமைக்கப் பட்டிருந்தது
பிரார்த்தனை கூடம்.பிரார்த்தனை சமயங்களும் தெரிந்தது.தாஜ்மகாலைப் போன்ற அமைப்பு இருப்பதாக
தாஜ்மகாலைப் பார்த்தவர்கள் கூறினர்.முற்றிலும் முகலாய கட்டட கலைப் படி கட்டப் பெற்றதாக
சொல்லப்படும் இந்த மசூதி 1996ல் தொடங்கப்பட்டு 2007ல் கட்டி முடிக்கப் பட்டிருந்தாலும்
2008இல் இருந்து பொதுமக்களும் வந்து போகும் இடமாய் இருந்து வருகிறது.

வெளியே வந்து வண்டியில் அமர்ந்து அல் ஐன் போவதற்கு
முன்னால் பசியாறிவிட்டு செல்லலாம் என முடிவு செய்தோம்.
அடுத்த பாகத்தில் அல் ஐன் பயனத்தை தொடர்வோம்…
இனிமையான நினைவுகளை எழுத்தாக்கி இருக்கும்விதம் நன்று அண்ணா. வாழ்க்கையின் மிச்சமாக நமக்கு கிடைக்கப் போவது நாம் சந்தோசமாய் இருந்த நாட்கள் மட்டும்தான்.
ReplyDeleteமூன்று தினமும் குடும்பத்தாரோடு மிக இனிமையாக கழிந்தது. தங்களின், அண்ணியின், பிள்ளைகளின் பேரன்பில் நாங்கள் நனைந்தோம்...!
நன்றிகள் அண்ணா...!