Monday, November 12, 2012

நீயா நானா - 11/11/2012

நேற்று 'நீயா நானா' நிகழ்ச்சிப் பார்த்தேன்... மனதில் ஒரு வகையான அதிருப்தி நிலவியது.
 
சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுது இம்மாதிரியான எண்ணம் தோன்றுவது தவிர்க்க முடியாததாய் ஆகிவிடுகிறது. சில நேரம் நடத்தப் படும் விதத்தினால் ; சில நேரம் நடத்துபவர்களால்... சில நேரம் நிகழ்வில் கலந்து கொள்பவர்களால்.... சில நேரம் 'ஏனோ தெரியவில்லை...எனக்குப் பிடிக்க வில்லை' என்ற பதில் மட்டுமே மிஞ்சுகிறது.
 
நேற்றைய நிகழ்ச்சியினை பார்த்த பிறகு உண்டான திருப்தியின்மைக்கு சொல்லப் பட்ட 'சில நேரம்' எதுவுமே காரணமின்றி இருந்தது. எனக்கு தோன்றியது, எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு. இந்த மாதிரியான தலைப்பை எடுத்துக் கொண்டதற்கான காரணத்தை வெவ்வேறு விதமாய் திரு.கோபிநாத் அவர்கள் கூறி வந்தாலும், ஏனோ அவை யாவையுமே ஏற்றுக் கொள்ள என்னால் இயலவில்லை.
 

உடுக்கும் உடை சம்பந்தமான தலைப்பு... அதுவும் வட இந்தியர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் இடையேயான வேறுபாடுகள்.... யாருக்கு உடையலங்காரம் செய்து கொள்வதில் அதிகமான புலனுணர்வு இருக்கிறது ? விரசமாய் உடை உடுத்துபவர்கள் யார் ? தென்னிந்தியர்கள் உடுத்தும் உடையில் வட இந்தியர்களுக்கு பிடித்தது எது...பிடிக்காதது எது ? இதே மாதிரி வட இந்தியர்கள் உடுத்துவதில் தென்னிந்தியர்களுக்கு பிடித்தது எது... பிடிக்காதது எது?
 
எனக்குள் எழுந்த கேள்வி... இந்த மாதிரியான தலைப்புகள் தேவைதானா ? இரு பிரதேசங்களுக்கும் இடையேயான கலாச்சாரங்களைப் புரிந்து கொள்வது தான் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் என்று திரு,கோபிநாத் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினாலும்.... தலைப்பை எடுத்துக் கொண்டுவிட்டோம்... அதனை நியாயப்படுத்தும் முகாந்திரமே அந்த சொற்களில் அதிகம் தெரிந்தது...
 
ஏற்கனவே வட இந்தியனுக்கும் தென்னிந்தியனுக்கும் ஏகப் பொருத்தமாய் இருக்கிறது. ஒரே அலுவலகத்தில் இரு சாராரும் இருக்கும் பட்சத்தில் இந்த பொருத்தம் எளிதில் விளங்கும். இந்த நிலையில் இப்படிப்பட்ட தலைப்பினால் புரிதலை விட பிரிவினையை உண்டாக்கும் சூழலே அதிகமாய் எனக்குப் பட்டது.
 
நீயா நானா நிகழ்ச்சியில், மக்களுக்கு புரிதலை உண்டாக்கும் கருத்துகள் அதிகமாய் சொல்லப்படும். கோபிநாத் அவர்களின் ஒவ்வொரு வரியிலும் இப்படி நடந்து கொண்டிருக்கிறதே....என்ற ஆதங்கம் இருக்கும். எப்படி இதனை சரி செய்வது....என்ன செய்தால் நல்ல முடிவு பிறக்கும் என்ற கோனம் இருக்கும்,,,,
 
ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் ?? கேள்விக் குறியே மனதில் மிச்சமாய் இருந்தது.
 
நீயா நானா என்ற நிகழ்ச்சியின் மேல், மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. நிகழ்ச்சியில் எடுத்துக் கொள்ளப்படும் தலைப்புகள், அந்த எதிர்பார்ப்பை கொன்று புதைத்து விடுமோ என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த பதிவு....

 

Monday, November 5, 2012

ஈத் விடுமுறை 2012 - பாகம் ஐந்து


ஆனாலும் மனதினூடே பயம் எட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.ஒரு வேளை மலைக்கு மேல் உணவகம் இல்லாவிடில்?போய்ப் பார்ப்போம்… எப்படியும் மலை மேல் போவது… உணவருந்தும் வசதி இல்லாவிட்டால், சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு சீக்கிரம் வந்துவிடலாம் என்று பேசிக் கொண்டே மலைப் பாதையில் மேலே ஏறத் துவங்கினோம்.

மலைப் பாதையில் ஏறும் போது, இனிமையாய் இருந்தது. SPBஇன் இனிய குரலில் ‘வளைந்து நெளிந்து போகும் பாதை’ என்ற பாடல் மனதினுள் ஒலித்தது.மெதுவாய் ஏறினோம்…இயற்கையை ரசித்துக் கொண்டே.ரம்யமான இரவு.மலை மேல் ஏறியவர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர்.எங்களைப் போல சிலர் மேலே ஏறிக் கொண்டிருந்தனர்.’வாவ்’… ‘சூப்பர்’… ‘என்ன அருமையாய் இருக்கு’ என்று அவரவர்கள் தாங்கள் பார்த்த காட்சியை வியந்துக் கொண்டிருந்தோம்.ஒவ்வொரு முறை யார் வாவ் சொல்கிறார்களோ அவர்கள் பக்கம் திரும்பினோம்.எதையும் பார்க்காமல் விட்டுவிடக் கூடாதென்ற பயம் தான் காரணிJ. மேலே ஏறும் வழியில் ஆங்காங்கே ‘பார்க்கிங்’ (Parking) செய்து மேலிருந்து கீழே பார்த்து ரசிக்க ஏதுவாய் ‘View Point’ அமைத்திருந்தது எங்களை ‘ம்ம்ம்’ சொல்ல வைத்தது.

மலை மேல் ஏறும் போதே, திரும்பி வரும் பொழுது எங்கே காரை நிறுத்த வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டோம்.ஒரு வழியாய்(நிஜமாக ஒரு லேன் தான் இருந்தது) மலை மேல் ஏறி முடித்திருந்தோம்.ஏதோ மலை மேல் கால் நடையாய் ஏறி வந்தது போல் அலுப்பு இருந்தது.எத்தனை வாகனங்கள்…எத்தனை மனிதர்கள்….எத்தனை நாட்டைச் சேர்ந்தவர்கள்… எங்கே போயிருந்தனர் இத்தனைப் பேரும்? ஏறி வரும் பொழுது ஏனோ நாங்கள் மட்டுமே ஏறி வந்தது போல ஒரு பிரமை…இருளில் மலை மீது ஏறி வந்தோம்.ஆனாலும் வந்த வழியெல்லாம் இருளை விளக்குகள் இரையாக்கி இருந்தன.விளக்குகள்…விளக்குகள் உமிழ்ந்த வெளிச்சம் என மேலே வரும் அனைத்து வாகனங்களையும் வரவேற்றுக் கொண்டிருந்தன இயற்கையின் நடுவே மனிதன் செய்து வைத்த செயல் கைகள்…

வண்டியை நிறுத்திவிட்டு, மெதுவாய் கீழே இறங்கினோம்.எங்கள் வரவை எதிர்பார்த்திருந்தது போல் காற்று குளிராய் எங்களைத் தீண்டியது.குளிரில் நனைந்தோம்… உணவகம் இருப்பது ஆறுதல் அளித்தது.மெதுவாய் உணவகம் நோக்கி நடக்க துவங்கினோம்…தீண்டிய குளிர்ந்த காற்றை சுவாசித்த படியே.குழந்தைகள் திறந்த வெளியில் ஓடத் துவங்கினர்.காற்றில் ‘Nitrous Oxide’ அதிகமாய் இருந்ததோ என்னவோ…அனைவர் முகத்திலும் புன்னகை.உலகில் உள்ள அனைத்தையும் சாதித்து விட்டது போல் ஒரு நினைப்பு.

உணவகம் சென்று கொஞ்சம் அதிகமாகவே உணவருந்தி விட்டு…ஒரு தேநீர் அருந்திவிட்டு அங்கேயே கொஞ்ச நேரம் அமர்ந்தோம்.சிறிது நேரத்திற்குப் பிறகு குளிரின் நெடி அதிகமானது.மகிழ்ச்சி தந்த அதே குளிரான காற்று கசக்கத் தொடங்கியது.இது தான் வாழ்வின் தத்துவமோ?இந்த குளிர் மட்டும் கொஞ்சம் கம்மியாக இருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டுப் போகலாம்….ம்….என்ன செய்ய என்று எங்களுக்குள் பேசியபடி…சரி கீழே போகலாமா…வேற வழி…என்றபடி வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.இந்த மலையின் உச்சி எப்படி எல்லா குழந்தைகளையும் மகிழ்வாக்க முடிகிறது.குழந்தைகளை மட்டுமா? பெரியவர்களையும் தான்….

வாகனத்தில் ஏறி, ஹீட்டர் பட்டனை தட்டிவிட்டு குளிர் காய்ந்தோம்…மெதுவாய் கீழே இறங்கத் தொடங்கினோம்.ஏய் அங்க இடது பக்கம் பாரேன் என்று நான் சொல்ல..(வாகனத்தில் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கிறோம்).. என்னதுண்ணா என்று தேவா திரும்ப, ஒரு நொடி வாகனம்….எப்பா…இனிமே ஒன்னும் சொல்லாதீங்க என்று பின் புறத்திலிருந்து குரல் வர…பயமாய் தான் இருந்ததுL

நாங்கள் ஏறி வரும் போது பார்த்து வைத்திருந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு…சிறிது நேரம் அரட்டை…சிறிது நேரம் விளையாட்டு…சிறிது நேரம் இயற்கையின் ரசிப்பு…சிறிது நேரம் குழந்தைகளின் பாட்டு…சிறிது நேரம் கேலி….சிறிது நேரம் குழந்தைகளின் சினுங்கல்… அந்த சினுங்கலை சிக்கனமாக்க பெரியவர்களின் சிக்கனம் இல்லாத முயற்சி…சிறிது நேரம் புகைப்படங்கள்…இத்தனைக்கும் நடுவே தேவாவின் தூக்கம்.வாழ்வின் வசந்த காலம்… இறந்த காலத்தையும் வருங்காலத்தையும் மறந்து விட்டு நிகழ்காலத்தில் நிதர்சனம்…

அந்த இடத்திலிருந்து கீழே நோக்கிய பொழுது எத்தனை விளக்குகள்…ஒரே சீராய் சீறிப்பாயும் வெளிச்சம்…மஞ்சள் நிறமாயும் வெள்ளாய் நிறமாயும்…ஓ!...அருமை!! இரெண்டு மணி நேரம் அங்கே கழித்துவிட்டு…கிளம்ப மனமின்றி…மீண்டும் வரனும்.. இங்கே அமர்ந்து உணவு சமைத்து சாப்பிட வேண்டும்…கண்டிப்பா வரனும் என்று எங்களுக்குள் உறுதி அளித்துக் கொண்டோம்… அந்த உறுதியை அந்த மலைகளுக்கும் தெரியப்படுத்தி கீழே இறங்கத் தொடங்கினோம்.

கீழே இறங்கிக் கொண்டிருக்கும் பொழுது எதிரே சின்ன சின்னதாய் மின்மினிப் பூச்சிகள் ஊர்ந்து வருவது போல் தோன்றியது.என்னவென்று பிடிபட நாங்களும் அந்த மின்மினிப் பூச்சிகளை சுமந்து வந்த மிதிவண்டிகளும் அருகருகே வரவேண்டியதாயிற்று. முதல் வளைவில் பார்த்த பொழுது ஏதோ நான்கு பேர் மிதி வண்டியில் மலை மேல் ஏறுகிறார்கள்…எதற்கு இவர்களுக்கு வேண்டாத வேலை…என்று நாங்கள் நினைத்ததற்கு காரணம்… எங்கள் கால் வலித்தது.இரெண்டு வளைவிற்குப் பின் புரிந்தது…ஒரு 50 பேராவது மிதிவண்டியில் மேலே ஏறிக் கொண்டிருந்தனர்.

நாங்கள் எங்கள் வாகனத்தை செலுத்த ‘steering’ மட்டுமே தேவைப் பட்டது.அந்த மேட்டில் நாங்கள் ஏறி வந்தோம் என்பது ஒரு பக்கம்…இப்பொழுது மிதி வண்டியில் ஏறி வருபவர்களை வியக்காமல் இருக்க முடியவில்லை…அப்படியே இறங்கிக் கொண்டிருந்தோம்…குழந்தைகள் தூங்கத் தொடங்கியிருந்தனர்.தேவாவும் நானும் விழித்துக் கொண்டிருந்தோம்.ஏனோ… தேவாவின் மனைவி தூங்கவில்லை….கீழே இறங்கியதும் ‘Green Muzzabarah’ என்ற போர்டைக் கண்டு.. பாத்துட்டுப் போயிடலாமா என்று தேவா கேட்க…. எப்படியும் நாளைக்கு விடுமுறை தானே… போகலாம் என சொல்ல… வண்டி திரும்பியது….

இது பாலைவனம் தானா என்று வியக்க வைத்தது…எத்தனைப் பெரிய நிலப் பரப்பு.. காணும் இடங்களிலெல்லாம் பச்சை நிறம் தோன்றும் பாரதியின் பாடலை வாய் முனுமுனுத்துக் கொண்டே இருந்தது.பாறைகள்,மலைகள்,நிலபரப்பு என்று எல்லா இடங்களிலும் புற்களும்,செடிகளும் மரங்களும்…தானாக வளரும் இடங்களிலேயே பராமரிப்பது கடினமாய் இருக்கும் தருவாயில்,மலைகள் மேல்,பாறைகள் மேல்,பாலைவன நிலத்தில் மரம்,செடி,புல் போன்றவற்றை நடவு செய்து பராமரித்தும் வரும் அழகு….செயற்கையான இயற்கை தான்…ஆனாலும் பிரமிக்க வைத்தது.

வாகனத்தில் அனைவரும் தூங்கிவிட்ட படியால்,ஒரு சில இடங்களில் தேவாவும் நானும் இறங்கி பார்த்து ரசித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு ஏனைய பச்சை நில பரப்புகளை வாகனத்திலிருந்து ரசித்த படி உலா வந்தோம்.அந்த பசுமை காட்சிகள் மனதினுள் ஓடிக் கொண்டே இருந்ததை தவிர்க்க முடியவில்லை…பேசிக் கொண்டே துபாய் செல்லும் வழியை போர்டில் பார்த்தும் அடுத்தவரிடம் கேட்டும் தொட்டுவிட்டோம்.வரும் வழியில் அல் ஐன் நகரின் உட்புறமாய் வர நேர்ந்தது…ஈத் திருநாளை முன்னிட்டு அனைத்து கடைகளும் திறந்தே இருந்தது…

இரவு நேரம் என்பதால், மெதுவாய் வாகனத்தை செலுத்தியபடி பயணித்தோம்.அவ்வப்போது பின் இருக்கையிலிருந்து குரல் கேட்டது.மிச்ச படி தேவாவும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.துணைக்கு வானொலி….80கிமீ வேகத்தைத் தாண்டவில்லை.துபாய்க்குள் நுழையும் தருவாயில் ஒரு இடத்தில் நிறுத்தி, தேநீர் அருந்திவிட்டு மணியைப் பார்த்தால் 4.30. வாகனத்தை ஒப்படைத்துவிட்டு வீடு வந்து சேரும்போது மணி 5.30…

நல்ல பயணம் இனிதே முடிந்த சந்தோஷத்தில், 600 கிமீ ஒரே நாளில் கடந்த அலுப்பில் படுத்து உறங்கினோம்…என்று நினைத்தாலும் அந்த 1 நாள் பயண நினைவு நெஞ்சை விட்டு அகலாது!!

தங்கள் பின்னூட்டங்கள் என்னை சரி செய்து கொள்ள, செம்மைப் படுத்திக் கொள்ள உதவும்.பயண அனுபவம் எழுதுவது இதுவே முதன் முறை…குறைகளை சுட்டிக் காட்டுங்கள்…திருத்திக் கொள்கிறேன்…

 

தோழமைகளுக்கு நன்றி!!