Sunday, April 29, 2012

எதிர்பார்ப்பு....


காத்திருக்கும் பொழுதுகள்…..எதிர்பார்ப்பு!

பிடித்தவரின் வருகையை எதிர்பார்த்து

பித்தம் பிடித்து

பிரிவில் பினைந்து

பார்வை பதித்தாலும்

காணும் கண்ணில்

கவனம் கலைந்து

கருவைத் தொலைத்து

எல்லாவற்றிலும் எரிச்சல்….

எதிர்பார்ப்பு நிறைவேறும் வரை!!



தேடிய தென்றல் அருகில் வந்தபின்

தேன் மொழியாய் வார்த்தையை எதிர்பார்த்து

தேகம் தொலைத்து

தேவையில் தோய்ந்து

தாக்கம் தகித்தாலும்

செவிக்கும் சொல்லில்

சலனம் சிதைந்து

செய்வது அறியாது

எல்லாவற்றிலும் எரிச்சல்….

எதிர்பார்ப்பு நிறைவேறும் வரை!!

நினைத்தது நடந்ததும்

நினைவுகள் நிறைந்தது!

நித்தம் நிம்மதி….இனி….

இருவருக்குமே எனும் போது!!


Monday, April 23, 2012

காதல் மெய்ப்படும்!!


சண்டை, சச்சரவு சாத்தியம்

நம்பிக்கையே நாகரீகம்

வாய்மையே வெல்லும்

காயங்கள் களவாடப்படும்

கண்ணீர் கரை காணும்

புன்னகை புண் ஆற்றும்

நிஜமான நகைச்சுவை நஞ்சை அகற்றும்

மாயமான, மதிகெட்ட வாதங்கள் முடிவின்றி தொடரும்

சகிப்புத்தன்மை சாதரணமாகும்

தொடர்பு தொடரும்

அந்தரங்கம் ஆராயப்படும்

பொறாமை போற்றப்படாது

இவையாவும் இறுதிவரை இயங்கினால்

காதல் மெய்ப்படும்!!

Wednesday, April 18, 2012

கருத்து.....


அடுத்தவருக்கு அள்ளி வீச

ஆணித்தரமாய் கருத்துக்கள்

இச்சை இவையாவிலும்

ஈடுபட தோன்றாமல்…..

உனக்கு சிக்கல் என்றால்

ஊமையாக,

எட்டி நின்று

ஏதாவது கேள்வி கேட்டு

ஐயோ பாவம் மட்டும் சொல்லி

ஒருவருக்கும் பலனில்லாமல்

ஓரளவிற்கும் மனித நேயமில்லாத மனிதனுக்கு

ரௌத்திரம் பழகு போன்ற கருத்துக்கள் எதற்கு ?

Tuesday, April 17, 2012

காதல் என்கிற உணர்வு....


காதல் என்ற வார்த்தைக்குள் சிக்காமல் இத்தனை நாட்கள் கடந்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்….ஆனால், காதல் மனிதன் தோன்றுவதற்கு முன் பிறந்து, மரணித்த பின்னும் மடியாமல் இருக்கிறது. எத்தனை பேர் அதனை உணர்ந்திருக்கிறோம் ? பிறந்ததற்கான காரணம், தாய் தந்தையரின் காதல். பிறந்த பிறகு, நம் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் காதல் இருக்கிறது. காதல் என்கிற அந்த உணர்வு வளர்ச்சியின் வயதிற்கேற்ப, வளர்வதோ தேய்வதோ இல்லை. ஆனால், வளர்ச்சிக்கு அப்பாற்பட்டு சில சமயங்களில் வெளிப்படுகிறது. பல சமயங்களில், உணர்வாகவே உள்ளடங்கி போய்விடுகிறது.   

காதல் எப்பொழுது வெளிப்படுகிறது ? உணர்வுகளை அடக்க முடியாத போது, வெளியே வந்து தானே ஆக வேண்டும்…..அப்போ, உணர்வின் வெளிப்பாடு தான் காதலா ? கொஞ்சம் ஆழமாக பார்க்க வேண்டும்…..

நாம் பலரிடம் அன்பாக இருக்கிறோம். நாம் அன்பாக இருக்கிறோம் என்பதை பல வழிகளில் காட்டுகிறோம். சில சமயம் வெளிக்காட்ட முடிவதில்லை…அந்த சமயங்களில், நம்மால் உணர்வு பூர்வமாக யோசிக்க முடிவதில்லை. அனைவரும் இந்த நிலைக்கு பல சமயங்களில் தள்ளப் பட்டிருக்கிறோம். இதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. இதற்கான காரணம் – நம்மால் உணர்வை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற திசையிலேயே நம் எண்ணங்கள் இருக்கின்றன. உணர்வு பூட்டப்பட்டு விடுகிறது.

அதனால் தான், உணர்வின் வெளிப்பாடு காதலாகிறது. வெளிப்படுத்தாத உணர்வும் காதல் தான். அந்த சமயங்களில் காதல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத் தொடங்கி விடுகிறது – உணர்வு என்ற புனை பெயருடன்.

ஏன் இந்த உணர்வு போராட்டம் ? அதற்கு காரணமும் நாம் தான். காதலை வெளிப்படுத்தினால், அது எவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் என்கிற பயம். வெளிப்படுத்தும் சமயம் சரி தானா என்ற சந்தேகம். வெளிப்படுத்தும் விதத்தில் மனதினுள்ளே பட்டிமன்றம். விளைவு – மயான அமைதி…. உணர்வின் உள்ளிருப்புப் போராட்டம்.

இந்த சமயங்களில், அடுத்தவர் பேசுவது மூளைக்கு எட்டுவதில்லை. நாம் எடுக்கும் முடிவுகள் சுய சிந்தனையுடனோ, சொல் பேச்சுக் கேட்டோ எடுக்கப் படுவதில்லை. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று சிந்திப்பதில்லை. சுருக்கமாக சொன்னால், நாம் நாமாக இருப்பதில்லை.

உன்னுடைய இந்த நிலையையும் ஒருவர் புரிந்து கொள்வார்…காலத்தின் வளர்ச்சிக்கேற்ப, அந்த நபர் மாறுபடுவார். அந்த புரிதல் காதல். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், நாம் அறிவோம் – எத்தனை முறை நாம் அடுத்தவரின் மன நிலையை புரிந்து கொண்டிருக்கிறோம்….இன்று அமர்ந்து, விட்டத்தைப் பார்த்தோ, வானத்தைப் பார்த்தோ நாம் யோசிக்கும் பொழுது, நாம் புரிந்து கொண்ட நிமிடங்கள், நொடிகள் நம் நினைவில் நிற்கும். சில சமயம் அறிந்து…பல சமயங்களில் அறியாமல். அந்த யோசித்தல் காதல்….புரிதல் காதல்….அறிதல் காதல்…..அறியாமையும் காதல்.

எத்தனை முறை, நம் நினைவுகளால் சூழப்பட்டு, ‘அந்த’ ஒரு கால கட்டத்திற்கு பயனித்திருக்கிறோம்….இந்த நொடியை மறந்திருக்கிறோம் ? அந்த நினைவும் காதல். நினைவுகள் வருவதற்கு காரணம்…அந்த உணர்வு காதல். உணர்வினை, சொல்லாமல் சில நேரம் புரிந்து கொள்வார்கள். முக பாவம் அல்லது ‘உம்’ சொல்லும் தொனி – இது போதுமானது – உணர்ச்சியை வெளிப்படுத்த. அது சரியான நபரிடம் சரியான தருனத்தில் காட்டப்பட வேண்டும். ஆக மொத்தத்தில், வெளிப்படுத்த வேண்டும்….அல்லது உணர்ச்சி புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது தான் காதல்……

அந்த ஒரு நபருடன் இருத்தலே பல சமயங்களில் நமக்கு இன்பமாக இருக்கும். சிலருக்கு தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இரெண்டுமே காதல்!! சொல்வது சுகம் ; சொல்லாமல் இருப்பது சுமை….சுமையும் சுகமாவது காதலில் மட்டும் தான்! சொல்லாமல் இருப்பதாக நினைத்து, நமக்குள் எத்தனை முறை நம் உணர்வை வெளிப்படுத்துகிறோம் ? உணர்வினை சொல்ல வேண்டியவரிடம் சொல்லாமல், பலரிடம் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நினைவை, அந்த உணர்வை, நம்மை விட்டு அகலாமல் நாம் பார்த்துக் கொள்கிறோம்….அது தான் காதல்!

Sunday, April 15, 2012

உணர்வும் காதலும்!

மணி....ஓசை எழுப்புவதில்லை
அடிக்கும் வரை!

கல் சிற்பம் ஆவதில்லை
செதுக்கும் வரை!

எழுத்துக்கள் வார்த்தை ஆவதில்லை
ஒன்றாகும் வரை!

வார்த்தைகள் படைப்புகள் ஆவதில்லை
படைக்கும் வரை!

கற்பனைகள் உண்மை ஆவதில்லை
உழைக்கும் வரை!

உணர்வுகள் காதல் ஆவதில்லை
சொல்லும் வரை!

Thursday, April 12, 2012

ஆதலினால் காதல்....


கனவில்…
காதலை கண்களால் கவித்து
களவு கொடுத்த மனதோடு
கசடற இருந்தேன்….
ஆனால் சுகமாய் இருந்தேன்!

நிஜத்தில்…
நினைவுகளை நெஞ்சோடு நிறுத்தி
நின் எண்ணத்தில் மயங்கி
நிறைவாய் இருக்கிறேன்….
சுகமாய் இருக்கிறேன்!

நடப்பது என்ன? - நிகழ்வு....காதலால் ஆன நினைவுகள்
நடந்தது என்ன? - நினைவுகளுக்கு ஆதாரமான காதல்
கனவும் நிஜமும்
கண்டிப்பாய் வாழ்வில் உண்டு….
கனவை நிஜமாக்கு….
நிஜத்தில் கனவை கல
காதலை நிறைவு செய்ய நினைவுகள் அவசியம்….
நினைவுகள் காதலின் எதிரொலி
நிஜம் நினைவுகள் நிறைந்தது!
ஆதலினால் காதல்.....

Wednesday, April 11, 2012

காதலாகவே நில்!

காதல்.....

ஒவ்வொரு மனிதனிடமும் அந்த உணர்வு உண்டு.
சில சமயங்களில் காதல் வெளிப்படுகிறது.
பல சமயங்களில்
அடைந்துப் போகிறது....

சொல்ல சொற்களின்றி,
வெளிப்படுத்த விவேகமின்றி,
சரியான சமயமின்றி....அடைக்கப் படுகிறது....

அடைந்து போகும் பொழுதுகளிலெல்லாம்
அவச் சொல்லுக்கு
அபயம் அளித்து
அறுவடை செய்ய முடியாமல்
காதலை, களையெடுப்பது போல,
கலைத்து விடுவதாக, கலைந்து விட்டதாக
கருதி, கரைந்துவிடுகிறோம்.....காதலிலேயே!

வடு மறைவதில்லை...
வருங்காலத்திலும்,
வந்த வசந்தம்
வந்தேன் சென்றேன் என்று செல்வதில்லை.

நினைவுகள்
நிலவு போல
நிலைத்து நிற்கும்....
அமாவாசையில்லாத நிலாவாய்
தேயும் நிலா மீண்டும் வளரும் ;
நினைவுகள் மொத்தமாய் நிறைவடைவதில்லை....

நினைவுகள்
காதல் என்ற உணர்வை
அழியாமல் பாதுகாக்கும்
நிகழ்வு....
நிகழ்வென்பதால்
நிகழ் காலமாகவே காதல்....

காதலை
பிற உணர்வுகளால்
புறம் தள்ள
பிரயத்தனப்பட்டு
பிராயங்கள் ஆனாலும்
பின்னடைவு காண்கிறோம்....

போர்வைகள் பல
போர்த்தினாலும்
போராட்டம் பல செய்தாலும்
போற்றும் உணர்வு வேறெதாக இருந்தாலும்
காதலை மறைக்க முடியாது....
வெளிப்படுத்தத் தயங்கினாலும்
வென்றிடும்.....

அழியாதது அண்டத்திலே...
அழிக்க முடியாதது அகிலத்திலே...
அருகாமையில் இருக்கும்....
அன்றாடம் வளரும்....

காதலாக மாறி
காதலாகவே நில்....!

Monday, April 9, 2012

அறிதல்....புரிதல்....

அறிதலும் புரிதலும்
புரிதலும் அறிதலும்
எது முதலில் வருகிறது ?

ஒருவரை அறிந்ததால் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோமா?
அல்லது
புரிந்து கொண்ட பிறகு அறிய முற்படுகிறோமா?

நட்போ,
காதலோ,
தெரிந்தவர்களோ,
அறிந்தவர்களோ,
உறவினர்களோ,
அந்நியரோ
அறிமுகம் ஆனதும்
அறிவுக்கு எட்டாமலே
அறிந்து கொள்ளவும்
புரிந்து கொள்ளவும்
(எது முதலில்.....என்ற ஆராய்ச்சி இன்றி)
முற்படுகிறோம்!!

பலரை அறிகிறோம்
பலரை புரிகிறோம்
ஒரு சிலரிடம் மட்டுமே
அறிதலுக்கும் புரிதலுக்கும் உகந்த படி
செயல் படுகிறோம்....

அவர்களுடனான உறவு நிலைத்து நிற்கிறது.

நம் செயல்பாடு மாறாத பொழுது
இடைவெளி விரிவடைகிறது!

அவனை எனக்குத் தெரியும் ; அவன் இப்படித் தான் ; அவள் இப்படித் தான்....
என்று கூறும் நாவிற்கு
நான் ஏன் இப்படியே இருக்கிறேன் ?
என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது ; தெரியாது....

உறவு நிலைப்பது நம்மால் மட்டுமே!!
அறிதல், புரிதல், அதன் படி நடந்து கொள்ளுதல்....
இவை போதுமே நல்ல உறவிற்கு....
மனித நேயத்தை காப்பதற்கு....!

காதலும் முரணும் - பாகம் 2


முரண்கள் நிறைந்தது தான் காதல். காதலை உணர்ந்து விட்டாய்…அது யாரால் வந்தது ? யார் மூலம் முரண்களை உன்னுள் கண்டாய் ? எதனால் இந்த முரண்கள் ? உன்னால் அதனை உணரமுடிந்ததா ? அது தான் ‘காதல்’.

மூல கர்த்தாவை கணிக்க முடியாமல் திணறுகிறாய்…..ஆராய உன்னிடம் நீ இல்லை. அது தான் உண்மை!! எங்கே தொலைந்துபோனாய் நீ ? நாம் தொலைந்துவிட்டோம் என்பதே புரியாமல், நம்மால் உணரப்பட்டவை இப்போது நமக்கு புரியவில்லையே என்று தேடுகிறாயே…..அந்த தொலைதலும், தேடலும் தான் காதல்…..

காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடி…பல அர்த்தங்கள் கொடுத்து….அனைத்தும் மெய் தான் என்று தோன்றி….கடைசியில் நீர் சென்றடையும் இடம் கடல் என்பது போல்….காதல் என்றால் மகிழ்ச்சி என்று உணர்ந்தாயே…..அந்த உணர்தலும் காதல்.

காதலி என்ற கற்பனை உருவிடம் பேசுவது போல் தொடங்கி, அது கற்பனை அல்ல என்று ஒத்துக்கொள்ள முடியாமல், கூட இருக்கும் நிகழ்காலம் தான் என்ற முடிவுக்கு உன்னை வர வைத்ததே….அது தான் காதல்! அந்த நிகழ்வை கடைசி வரை சொல்லாமல் சொல்லி, புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்று படிப்பவரின் மனநிலைக்கு விட்டாயே…..தோழா….அது காதல்!!

காதலின் தன்மைகள் இவை என்று ஒரு முடிவோடு தொடங்கினாய்….பிறகு, அந்த தன்மைகள் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என தெளிந்தாய்…அந்த தெளிவும் காதல்!! பேசி கொண்டே இருக்க வேண்டியது காதலுக்கு நிபந்தனை அல்ல….என்றோ பேசிய நினைவுகள் பேசிக் கொண்டிருந்தால்….? தனிமை என்பதே கிடையாது என்ற வரம் காதலால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைக்கு உன்னை உட்படுத்திக் கொண்டாயே…..அது காதல்!!

வாழ்வில் சாமானிய மனிதன் எதையெல்லாம் நேசிக்கிறானோ, எதெல்லாம் வேண்டும் என்று கனா காண்கிறானோ, இயற்கையின் நியதியை தன் முயற்சிக்கு பாலமாக்கிக் கொள்கிறானோ….அதெல்லாம் நடக்கும்!! அதோடு சேர்ந்து, காதலியின் நினைவுகள் போதுமென்ற முடிவுக்கு வந்ததற்கான காரணம் உன்னைத் தேற்றிக்கொள்ளவா ? அல்லது, காதலியின் மனது காயப்படக்கூடாது என்பதற்காகவா??

காதலின் பார்வையினால், கவிதை மட்டும் உயிர் பெறுவதில்லை….கலக்கங்களும் காணாமல் போய்விடுகிறது….வாழ்வும் கிடைத்து விடுகிறது. கடந்து போன வாழ்க்கைக்கும் அர்த்தம் பிறந்து விடுகிறது. காதலியின் கரம் பிடித்து கனவில் போகாத தூரங்கள் போவதற்கு பதில், அந்த காதலியே அருகில் வந்து, தன் கரத்தை மட்டுமல்ல, தன்னையே கொடுத்து….நாம் வாழ்வோம் என்று கூறினால் ?? கனவுலகம் எல்லாம் நனவாக மாறிவிட்டால் ?? ஏன் நினைவுகளோடு மட்டும் வாழவேண்டும் ? காதலில் மட்டும் போதுமென்ற உணர்வு வேண்டாம் தோழா……வாழ்க்கை முடிந்து விட்டது….வாழ்வு வேண்டும்…..இது தானே காதல்!!

Sunday, April 8, 2012

காதலும் முரணும்!!


பழகத் தொடங்கி சில வருடங்கள் முடித்ததற்கு பெருமூச்சு விடுகிறோம் ?? ஏன் என்று யோசித்துப் பார்த்தால்…

காதல் என்ற வார்த்தைக்குள் சிக்காமல் இத்தனை நாட்கள் கடந்துவிட்டோம் என்பதாலா ? இல்லை!! நம் உள்ளத்துக்குத் தெரியும்….காதலுக்குள்ளேயே வாழ்ந்துவிட்டு ‘நான் சொல்லவில்லையே’ என்ற ஆனந்தம் ஒரு புறம் ; சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம் மறுபுறம்!

முரண்கள் இல்லாத பழக்கம் இருந்ததற்கு எத்தனை கடினமாய் உழைத்திருக்கிறோம் ? காதலை சொல்லாமல் இருந்ததற்கு அதுவும் ஒரு காரணமாய் இருந்திருக்கும். எத்தனை முறை மனம் ஒவ்வாமல் ஆமாம் சொல்லியிருக்கிறோம் ? இதுவும் நமக்கு மட்டுமே தெரியும். நட்பாய் இருந்திருந்தால் கண்டிப்பாய் முரண்கள் இருந்திருக்கும். அதனால் தான் பல நேரம்.காதலையும் நட்பையும் தொலைத்துவிட்டு பிறந்த புதியதோர்………. பெயர் தெரியாத ஒன்று,,,, என்று மனம் தவிக்கிறது.

பெண்ணின் ஞானத்தை உள்வாங்கும் போது, அந்த பெண்ணையும் உள்வாங்கி நம்முள் நிறைக்கிறோம் ; நாமும் நிறைந்து போகிறோம்…..இது தான் காதல்! நம்முள் நிறைந்த அந்த பெண், நம்மைக் கரைத்து, நம்முள் இருக்கும் கற்பனைச் சிறகுகளையும் விரிக்கச் செய்கிறாள் ; நமக்குள் இருக்கும் கற்பனையையும் உணர்த்துகிறாள்…..இது தான் காதல்!

யார் கதைகள் சொன்னாலும், கவிதைகள் சொன்னாலும், அது நன்றாக இருந்தால், நம்மை மூர்ச்சையாக்கும். ஆனால், நமக்குள் கதைகள் பேசாது காதலாய் இருந்திராவிட்டால். சொல்லாமல் இருப்பது சுகம் ; சொன்னாலும் சுகம் --- இது காதல் மட்டுமே!!

நேசித்தலை சொல்லாமலே நேசிக்கும் வித்தை நாம் கற்றுக் கொண்டோம். அந்த வித்தைக்கு விளக்கம் என்ன என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியுமா ? மௌனங்களால் பல மொழிகள் பேசலாம். ஆனால், அடுத்தவருக்கு எந்த அளவில் புரியும் ? சொல்லப்படுபவருக்கு, முழுவதுமாக புரியும் மௌன மொழிக்கு பெயர் தெரியும் நமக்கு…..காதல் அன்றி வேறென்ன ??

வாழ்வியல் உண்மைகள், காமத்தின் வரைமுறைகள், வரைமுறையில்லா உறவு – இவை அனைத்திற்கும் ஒரே பெயர் காதல்!! அறிதலும் புரிதலும் காதல்!!

நீ பேசும் போது, பலர் அதனை உள்வாங்கலாம் ; ஆனால் ஒருவரால் மட்டுமே அதற்கு பதிலாய் வாய் பேசாமல், கண்களினால், நீ மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் ஒரு உணர்வு பாய்ச்சமுடியும், அது காதல்!!

மௌனத்தில் நிறைந்த சப்தமான உணர்வுகள் – குரு – சிஷ்யன் உறவில்லை ; நட்பில்லை ; எதையும் தொலைத்து விடவும் இல்லை ; அது காதல்!!

நாம் உணர்ந்து விட்டோம் ; ஆனாலும் அந்த உறவிற்கு பெயர் தேடுகிறோம் ; இல்லை – தேடுவது போல் நடிக்கிறோம். அந்த நடிப்பும் காதல் தான்!!

காதலும் கோபமும்!!


கோபமும் காதலும் முரனா ? முரன் தான் என்று தொடங்கி ஏன் முரனில்லை என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டு….கடைசியில், முரன் தான்…அது தவறு தான் என்று ஒரு முடிவுக்கு வருகிறோமே, தெளிவு பெறுகிறோமே…..அது காதல்!!

அனைத்து உணர்வுக்கும் ஒரு வடிவம் உண்டு. அந்த வடிவம் வார்த்தைகளாகவோ, காதலாகவோ, கோபமாகவோ, எரிச்சலாகவோ, மகிழ்ச்சியாகவோ, வருத்தமாகவோ இருக்கும்…..உணர்த்தப்பட வேண்டியது உணர்வு. நீ உனக்கள்ளோ, அடுத்தவருக்கோ அதை உணர்த்த வேண்டும். உணர்த்த முற்படும் போது, கொஞ்சம் மிகைப் படுத்துகிறோம்…சில உரிமைகளை எடுத்துக் கொள்கிறோம்….பல நேரங்களில் தளர்ந்து போகிறோம் – தவிப்பினால்.

இதில் எது செய்தாலும், செயல் முடிந்த பிறகு, நினைத்தது நடக்காமல் போகும் போது, காரணங்களை ஆராயத் தொடங்குகிறோம்…..தெளிவு பிறக்கிறது. தடையில்லாமல் சிந்திக்க வைப்பது காதல்….சிந்திப்பதை வெளிக்கொணர்வதில் குழப்பம்….அப்போது தான், நம்முள் இருக்கும் நல்லவற்றை மட்டும் வெளிப்படுத்துகிறோம்…..சில சமயங்களில் உணர்வு உண்மையாய் வெளிப்படும் போது, வெளிப்படுத்திய பிறகு - யோசிக்கிறோம்!!

அதீத காதலின் வெளிப்பாடு, கோபம். இதனை அறியாமல், பல நேரங்களில் தெரிந்தும் தெரியாமலும் இரெண்டையும் மோதவிடுகிறோம்….காதல் என்கிற பிரம்மாண்டம் சில நேரம் வெற்றியடைகிறது. பல நேரம் கோபம் நிலைக் கொண்டுவிடுகிறது. இதற்குக் காரணம், நாம் எடுத்துக் கொள்கிற அளவுக்கு அதிகமான உரிமை ; அல்லது அந்த உரிமை புரிந்துக் கொள்ளப்படாமை….

அனைவரிடமும் நாம் உரிமை எடுத்துக் கொள்வதில்லை….புரிதலுடன் கூடிய உரிமை, காதலாகிறது. சில சமயங்களில், வெளிப்படுத்தப்படும் கோபமும் புரிதலுக்கு உதவி செய்கிறது. அந்த புரிதல் காதலின் உருவெடுக்கிறது.

காதல் என்ற உணர்வு அனைவரிடமும் இருக்கிறது….அதை எந்த அளவில் வெளிப்படுத்துகிறோம்….எப்படி வெளிப்படுத்துகிறோம்….யாரிடம் வெளிப்படுத்துகிறோம்…..எப்பொழுது வெளிப்படுத்துகிறோம்…..இவை தான் புரிதல்….காதலின் அடுத்தப் பரிமானம்.

ஒவ்வொரு நாளும் காதல் வளர்ச்சியடைகிறது….புரிதல் அதிகமாகிறது. கெஞ்சி கிடைப்பதல்ல காதல்…உள்ளே இருக்கும் உணர்ச்சியை புரிந்து கொண்டு, தெளிவாக வெளிப்படுத்துதல், புரியும் படியாக வெளிப்படுத்துதல் – காதல்.

காதலின் மிளிர்வு


மறக்கவும் நினைக்கவும் ஒரே சமயத்தில் முடியுமா ?

அதைத் தான் செய்ய முயன்று பல முறை தோற்கிறோம்!!

விட்டத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம்மிடம் விடையிருப்பதில்லை….

நம் நினைவுகள் வெளிக்கொணரப் படுகிறது!!

காதலை நம்மிடமே இருக்கிறது என்பதை மறந்துவிட்டு எங்கோத் தேடுகிறோம்….

அந்த தேடலின் பயன்….தனியாக அமர்ந்து முரனான செயலை செய்ய முற்படும் போது வெளிவருகிறது….காதலின் மறுபக்கம் வெளிப்படுகிறது.

விலகியிருக்க விரும்புகிறேன் என்று சொல்லும்போது,

கண்ணீரில் காதலை கரைக்க முற்படும் போது,

இதயத்தின் சொந்தத்தை உதைத்துத் தள்ள எண்ணிய போது

நம்மை நாமே எப்படி மறக்க முடியும் என்று யோசிக்கத் தவறிவிடுகிறோம்…

அதனால் தான்

முரன் தோல்வியடைந்தது…..

மற்றொரு முறன் மனதினுள்…..கோபம் சினேகமாய்!!

தெரியாமல் தேடினோம்….

தேர்வில்லாமல் தெரிந்து தெளிந்தோம்…..காதல் என்றால் என்னவென்று….

மறக்க நினைத்த நினைவுகள் மரமாய் நம்முள் வேரூன்றி நின்றதும் காதல் தானே தோழர்களே!!

முரனின் திரட்சியைப் பார்த்தீர்களா?

மறக்க நினைக்கும் நினைவுகள் அழிவதில்லை!!

முடிந்த வினாடி மட்டுமல்ல….நிகழும் இந்த வினாடி வரை (எப்போது படித்துப் பார்த்தாலும் நிகழும் வினாடி மாறுவதில்லை!!) நினைவுகளை மறக்க முடியாது…நினைவுகள் மறிக்க மறுக்கும்….

நேசித்தல் புரியப்பட்டு விட்டது….

சொல்லித் தெரிவதில்லை காதல்….

சொன்னால் இன்னும் மிளிர்வடையும்!!

ஏன் ? எதற்கு ?

தோழர்களே!!

தமிழ் காதல் என்ற இந்த பக்கம் வந்ததற்கான காரணம்.....தமிழின் மேலுள்ள காதல். வேரொன்றும் இல்லை......

தமிழில் எனக்கு தோன்றுவதை என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை எழுதப் போகிறேன்....

நான் கவிஞனா ? இல்லை!! என் படைப்புகள் கட்டுரை வடிவில் வரும்....