Thursday, May 31, 2012

மாற்றம்....


பழங்கதைகள் பழக்கங்களாகவும்
வழக்கங்கள் வலுக்கட்டாயமாகவும்
விதி என்ற பெயரில்
விதி ஆனதோ வாழ்வில்?
மதி கொண்டு
மாற்றம் செய்ய எத்தனித்தால்
மாற்றானாம்….
பகுத்தறிவு பயன்படுத்தி
பக்குவப்பட பிரச்சாரித்தால்
பக்குவப்படாதவனாம்….
மாந்தரின் மயக்கத்தினால்
மாற்றத்திற்கு மாற்றுகருத்து
மாறாமல் மாயையாய்…
தகுதியற்றவனாய் தரம்தாழ்த்தும்
காழ்ப்புணர்ச்சி காலம்தோறும்...
தயக்கமின்றி தெளிந்து
தடைகள் தகர்த்தி
மாறித்தான் மாற்றுவோமே
மாற்றங்களை மதித்து!!

Monday, May 28, 2012

தன்முனைப்பு...


தன்முனைப்பு
தள்ளிப் போடுமோ
தயவின்றி தங்கும்
தருணத்தை….?
திமிர்
தின்று தீர்க்காதோ
தீர்வாய் தோன்றும்
தெளிவை?
ஆணவம்
அகற்றாதோ
அனுபவம் அருளும்
அன்றாடத்தை?
சுயநலம்
சுழற்றாதோ
சுகம் சுமக்கும்
சுவாசத்தை ?
இறுமாப்பின் இறுக்கத்தோடு
இனியும் இயங்கினால்
இன்னா செய்தவர்
இவரே இவரே!!

Thursday, May 24, 2012

விடியல்


விடியலில்
வானம் பார்த்து
வியந்து நின்றேன்
கதிரவன் உத்வேகத்துடன்!!
சிற்சில நாட்களில்
முறிக்காத சோம்பலுடன்…
மறைக்காமல் சொல்லேன்
முடியவில்லை தானே
முந்நூற்றி நாட்கள்
முகம் காட்ட ?
மடக்கி விட்ட மகிழ்ச்சியில் நான்...
வீரியத்துடன்
விண்ணிலிருக்கிறேன்
வீணாக்காமல் ஒவ்வொரு நொடியும்
நித்தம் வரமுடியாத மேகம்
கண்ணீருடன் சோகமாய்…
காண மனம் பொறுக்காமல்
பின்னால் மறைந்து
ஆனந்த கண்ணீராய்
அவ்வப்போது மாற்றுவேன் – மழையாய்!
பதில் கேட்டு
வெட்கி தலை குனிந்தேன் – மனிதனாய்…

Saturday, May 19, 2012

மரணித்த முயற்சி


காதலின் காதலால்

காதலைக் காத்தேன்

கார்மேகமாய்…

கண்டிப்பாய் கனமழை

பிரசவிக்கப்படும்

காதலின் பரிமாற்றம்!

மீண்டும் தயாராவேன்

காதலாகிய கருவை

மழையாய் ஈன்றெடுக்க….

ஊடலுக்குப் பின் கூடல்!

காதலை

மறக்க முயற்சித்தேன்

மரணத்திலாவது

மரணித்து விட்டது

மறக்க முயற்சித்த மனது!

Tuesday, May 15, 2012

பெண்சிசு....


இருவர் இருளில்
இன்புற்றிருந்த இருநொடிகள்
கருவாய் நான்……
இருக்கிறேன் என்பதனை
இனியவள் உணர
இருபத்தெட்டு நாட்கள்!
உள்ளேன் என்பதனை
உறுதி படுத்த
உதிரத்தின் சான்று!
தாய்மை உணர்வு!!
மகிழ்ச்சியின் ஊற்று!!
ஐயிறுத் திங்கள்
ஐயத்துடன் நான்….
இருட்டின் சூழலிலே
குருட்டு வாழ்வு!
முதல் சுவாசிப்பு
முழுமையாக முடிக்கும் முன்
ஏதோ பார்த்துவிட்டு
ஏதேதோ பேசினார்கள்….
கல்லறையில் நான்….
கண்ணீரில் தாய்மை!!


Sunday, May 13, 2012

கலாச்சாரம்.....எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் ?


இரெண்டு நாட்கள் முன்பு, அபுதாபியில் ஒரு தமிழ் பாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் குழந்தைகள் குழுக்களாய் பாட வேண்டும்…குழுவில், சிலர் கருவி இசைக்க, 4-5 குழந்தைகள் பாடுவர். இது விதியாக நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் கூறியது என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது….அந்த தாக்கம் இன்றும் என் மனதில் ஒரு நெருடலாய் நீடிக்கிறது.

15-20 குழுக்கள் போட்டியிட்டனர். அமீரகத்தில் பாடத் தெரிந்த குழந்தைகள் இவ்வளவுதானா என்ற எண்ணத்தில் நான் இருந்த பொழுது, தொகுப்பாளர் பேசினார். அந்த பேச்சு என் கேள்விக்கு விடையளித்ததோடு……..

சில பெற்றோர்கள் போட்டி ஒருங்கினைப்பாளரிடம் “தமிழ் பாடல்கள் பாட என் குழந்தைக்குத் தெரியாது ; வேறு பாடல்கள் பாடலாமா ?” எனக் கேட்க, இந்த நிகழ்ச்சி தமிழ் பாடல்கள் பாடுவதற்கு மட்டுமே என்ற பதில் கேட்டு போட்டியிலிருந்து விலகி விட்டார்களாம். “ஏன்….வேறு மொழி பாடினால் என்ன ? கெட்டா போய் விட்டது” என மனதினுள் முனங்கிய படி சென்றிருப்பார்கள் அந்த பெற்றோர்கள்….அதை என்னால் மனத்திரையில் காண முடிந்தது.
இது ஒரு புறம்.....

இன்னும் சிலர் தங்கள் குழந்தைகள் Jeans – T-shirt அணிந்து போட்டிக்கு வரலாமா எனக் கேட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வினை நடத்துவதற்கான நோக்கம், தமிழ் கலாச்சாரம் என்று ஒன்று இருக்கிறது….அதன் படி, சிறிய குழந்தைகள் (பெண்கள்) பாவாடைச் சட்டையிலும், பெரிய பெண்கள் தாவனியிலும் வர வேண்டும் என்பதும் விதி எனக் கூறியிருக்கிறார்கள். அதற்கு அந்த பெற்றோர்கள், எங்கள் குழந்தைகளுக்கு, அந்த மாதிரி உடை அணிந்து பழக்கம் இல்லை எனக் கூறி விலகியிருக்கிறார்கள்.

அந்த தொகுப்பாளர் இந்த இரெண்டாவது செய்தியைக் கூறிவிட்டு, “பெற்றோர்களாகிய நாம், தமிழ் ஆடைகளை பற்றி, ஏன் நம் குழந்தைகளிடம் கூறுவதில்லை…..பெரியவர்களாகிய நமக்கு, அந்த கடமை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. கடமையை உணரலாமே……தமிழ் சார்ந்த ஆடையை நாம் வெளிநாடுகளில் இருக்கும் பொழுது அணிவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த வாய்ப்பு வரும் பொழுதும், ஆடையை காரணம் சொல்லி, சில குழந்தைகள் பங்கேற்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது” என சொல்லி முடித்தவுடன், மனது வலிக்கத் தான் செய்தது.

பெற்றோர்களிடம் இந்த விளக்கத்தை சொல்லும் போதும், சொன்ன பிறகும் போட்டி ஒருங்கினைப்பாளர்கள் எத்தனை விமர்சனத்துக்கு ஆளாகியிருப்பர் ?

கலாச்சாரம் ஒரு மறந்து போன பொருளாகி விட்டது. அதனை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டாம் ; மறந்து விடாமல் இருக்கலாமே…..பெற்றவர்கள் போன்றது கலாச்சாரம். புதிய உறவுகள் எத்தனை வந்தாலும், பெற்றவர்களை மறக்க முடியுமா ? நம் கலாச்சாரத்தை, எங்கிருந்தாலும், பாதுகாப்பது, அழிய விடாமல் காப்பது, நமது கடமையில்லையா ?? நம் கலாச்சாரத்தில் நமக்கு அசிங்கமா ?

மனதின் வலி இன்னும் குறையவில்லை……

Thursday, May 10, 2012

வரம்


தவறுகள் தடையின்றி மடிந்து

இடையூறுகள் மாசற இடிந்து

நிச்சயமான நிகழ்வுகள்

நிசப்தமாய் அரங்கேறும்

பொற்காலம் பரணியிலே

தற்காலத்தில் தரணியிலே

தடையின்றி பெறுவது வரம்….

வருவது வரட்டும் என்றிருப்பின்

வராது வரம்….

வஞ்சனையில் கஞ்சனாய்

நெஞ்சத்தில் நஞ்சகற்றி

குறை கூறும் நாவினிலே

நிறையை போற்று நரம்போடு…

உற்றாரிடம் குற்றம் சொல்ல

சுற்றார் சாட்சியோ ?

தவற்றினை தவமாய் சத்தியமாய் செய்யவில்லை….

சேற்றினை வாறி இறைக்காமல்

தாமரையாய் மலர்வதற்கு

தயங்காமல் தோள் கொடு….

மனித நேயத்தை போற்றினால்

வரும் வரம்!!

Monday, May 7, 2012

காவியத்தின் ஓவியம்!


நினைவுகள் நெஞ்சோடு

கனவுகள் கண்ணோடு

நெஞ்சோடும் கண்ணோடும் நெகிழ்ந்து

வாஞ்சையோடு வஞ்சி உனை

நித்தம் நிகழ்வினில் நிறுத்த விளைந்தேன்….

கேள்வி எழுந்தது – ஏன் ?

வேள்வி வலுத்தது – பதில்….

பின்னூட்டமாய் பித்தம் வேண்டாம் என

கண்ணும் கருத்துமாய்

காலத்திற்கு காத்திருந்து

காதலை காவியமாக்கினேன்…..

காவியத்தின் ஓவியம் – நீ!!