Thursday, August 30, 2012

நிகழ்காலம்!!


மெளனமான நடையிலும்
மனதில் தடையின்றி
சிந்தனை சிதறல்...
நடந்த தூரம்
நாலடி இருந்தும்
எண்ண ஓட்டம் ??

நினைவுகள் பின்னோக்கி
நியாயமாய் நகர்ந்தாலும்
நிச்சயமான நிதர்சனம்
நிகழ்காலம்!!

வருங்கால வாழ்வினை
வென்றிட துடித்தாலும்
வெற்றியை வழங்குவது
இக்காலம்!!

கேலிகள் மனிதத்திற்கு
கேள்விகள் கேட்டாலும்
கேடு வரும் காலத்தை
முடிவெடுப்பது
மதி....இன்றைய மதி!!

நாளைய கவலையை
கவலையில் ஆழ்த்த
நிசப்தம் தவிர்த்து
நிகழ்த்திக் காட்டுவோமே...
நிகழ்காலத்தில்!!

Tuesday, August 28, 2012

உங்களுக்கு பிடித்தது!!



எங்கே கிடைக்கும்
என்று தேடி
எல்லை கடந்து - பின்
என்னிடமே கண்டேன்....


இலக்கில்லாமல்
இல்லையென புலம்லி
இருக்கும் இடத்தை
இழந்தேன்...


மதியின்றி
மறுபிறவியிலாவது..
மயக்கமான
மனநிலையில் நான்...


அது எது? என்று
'நாணமோ....இன்னும் நாணுமோ'
வகையில் கேட்டேன்...
பதில்


உங்களுக்கு பிடித்ததை
வைத்துக் கொள்ளுங்கள்...
நிம்மதி,மகிழ்ச்சி,சந்தோஷம்,காதல் !!

 





Monday, August 27, 2012

இது தான் காதல் ??


காதலை சொல்லலாமென்று
காதருகே சென்றேன்
காற்று மட்டுமே....

தாராளமாய் பேசினாள்
தயங்காமல் பேதை
தவிப்புடன் நான்...

அவளிடத்தே காதல்
அறவே இல்லையோ ?
அறிவிலியாய் மனம்...

அறுபதாவது நாளாய்
அருவியாக நினைத்து
அலையாய் நான்....

கரை தொட
கலக்கம் ஏன் ?
கறையில்லையே என்னிடம்...

நேர்கொண்ட பார்வையுடன்
நேரே பார்த்தேன்
நேசக் கண்களுடன் - அவள்...

கண்களைப் பார்த்து
கண்ணீர் மல்க
கன்னியவள் கூறினாள்

நின் காதலை
நான் அறிந்தேன்
நீ இன்னுமா ?

அவளின் காதலையும்
அறிந்ததை அறியாமலும்
அருகாமையிலிருந்தே.....

இது தான் காதல் ??

முயற்சி!!


பிறக்கும் போது
பிறை தான்
நிலவு நானும்...

நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
நம்பிக்கை நங்கூரமாய்
நிலவு எனக்கு!!

முழுமை பெற்றிட
பித்தலாட்டம் புனைந்து
பதினைந்து நாட்களை
பாதியாக்குவதில்லை நான்….
முறை தானே?

முயற்சியோடு வளரும்
பிறையாம் என்னை
பார்க்கும் மனிதம்
தனக்கு மட்டும் தனிவழி....
பிழை தானே??

வரிசையில் நிற்கையில்
சாலையில் செல்கையில்
கூட்ட நெரிசலில்
எங்கெங்கு நோக்கினும்
எரிச்சலில் என்னவர்கள்.....

ஏனடா மானுடா
என்னைப் பார்த்தாவது
என தொடங்கினால்
நிலவே உனக்குப் போட்டியில்லை
எங்களுக்கு அப்படியா ?
அதிர்ந்தேன்….

போட்டியிடு மனிதமே
பொறாமை வேண்டாம்
வளர்ச்சி தேவை தான்
பயிற்றுவிக்கப்பட்ட முயற்சியோடு
என்று விளங்கும்........??

Sunday, August 26, 2012

அறிமுகம்!


அறிந்தவர்களிடத்தே அறிமுகம்
அறவே தேவையில்லை...
 
அறியாதவர்கள் அறிந்துகொள்ள
அருகில் இருக்கும்
அறிந்தவர்கள் அறிமுகம்
அருகில் நாம்....
நாமும் இருப்பதால்
அறிமுகத்தில் நன்முகம்
நமட்டு சிரிப்புடன்
நாம்!

யாரோ யாரிடத்திலோ
யாரைப் பற்றியோ
அறிவிக்க
நன்முகம் கொஞ்சமும்
நயவஞ்சகம் நிறையவும்...
பிரதிபலன் பிரதிநாளும்
பின்மனதில் பிரபலமாய்!

எதுவுமே இல்லாமல்
என்னை அறிவித்த
என்னையே பெற்றெடுத்த
அன்னையே....
அன்பு நீ!!
அகமும் நீ!!

Tuesday, August 21, 2012

நான் அவனில்லை!!


புருவம் உயர்ந்தது
புன்னகை பதிலானது
புரிபடாத விஷயம்
பேசப்படும் சமயம்....

கூரான செவி
சீரான மனம்
தெளிவான பார்வை
புரிதலுக்கு உதவும்!

எனக்கும் தெரியும்
எனக்கு மட்டுமே
எனும் பொழுது
மூடிவிடுகிறாய் அறிவை!

தனக்கு தெரியும்
தள்ளி நிற்பவனுக்கு
தயக்கம் ஏன் ஏற்றுகொள்ள ?
துடி துடிக்கிறாய்!

அவனை நீயாக்கும் முயற்சி
தீங்கில்லை என்றாலும்...
உன்னை அவனாக சொன்னால்
நான் அவனில்லை என்கிறாயே!

நீ நீயாக இருந்து
அறிவை உறுதுணையாக்கி
ஆரூடம் பார்க்காமல்
மனதை திற!

மலர்ச்சி தேவை
மறுபடியும் மறுபடியும்!
மானிடனாய் வாழவும்
மனிதம் நிலைக்கவும்!!

Sunday, August 12, 2012

நீயா நானா - 12 ஆகஸ்ட் - வருத்தப்பட வைத்தது

நான் கோபிநாத்தின் ரசிகன்......ரசிகன் என்பதால், சில நிகழ்வுகள் வருத்தப்பட வைக்கிறது. இன்றைய நீயா நானா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எழுத தோன்றியது...எழுதுகிறேன்!

கனவினைப் பற்றிய பகிர்வு. நல்ல தொடக்கம். கனவினை எப்படிப் பார்க்கிறீர்கள் ? கனவுக்கு பலன் உள்ளதா? நூதனமான பகிர்வு....

பாதித்த விஷயம் - ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட ஒரு கனவினையும் அது தன் வாழ்க்கையும் பாதித்ததையும் சொல்ல அதற்கு அந்த அணியினர் கைதட்டியதும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அந்த பெண் தன் வாழ்வில் நடந்த சோகமான சம்பவத்தை சொல்லுகிறாள்....நிகழ்ச்சியை பார்த்தவர்கள் relate செய்ய முடியும். இது சரியா?

ஒருவர் பேசும் போது, அந்த கனவிற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். அந்த விளக்கத்தினால், அந்த பெண் காயப்பட்டு உணர்ச்சி வெள்ளத்தில் பொங்கி பேச, அதற்கும் கைதட்டல்...

இந்த கைதட்டல் தேவை தானா??? மனம் வலித்தது. கோபிநாத் எப்படி அனுமதிக்கலாம் ? அந்த பெண்ணின் வேதனையை எத்தனை பேர் புரிந்து கொண்டார்கள் ? சொல்ல வந்தது - கனவினில் வரும் சம்பவத்தை உதாசீனப்படுத்தாதீர்கள் என்று மட்டுமே....ஹெல்மெட் போடும் போது strapஐயும் போடுங்கள் என்று சொன்னார்கள்....நன்றி !!

ஆனால் தயவு செய்து, இந்த மாதிரி கருத்துக்கள் வரும் போது கை தட்டாமல் இருக்கலாமே....

இந்த பதிவினை கோபினாத் பார்ப்பாரா என்று தெரியாது.....ஆனால், இந்த செயலை, தொலைக்காட்ச்சியில் வருவதை தடுத்திருக்கலாம் என்பது என் கருத்து.....