Wednesday, October 31, 2012

ஈத் விடுமுறை 2012 - பாகம் நான்கு

அல் ஐன் பயணம்...(Jebel Hafeet)


வயிற்றை, போகும் வழியில் நிறைத்துக் கொள்ள முடிவு செய்து, ‘sandwich’ வகையறாக்களை வாங்கிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டே பயனத்தைத் தொடர்ந்தோம். அல் ஐன் செல்லும் வழியை கேட்டு அறிந்து, வண்டி சீறிப் பாய்ந்தது.மணி நான்கு.135 கி.மீ கடக்க வேண்டும்.6 மணி வரை தான் zoo திறந்திருக்கும்.ஸ்ம்ரிதியை எப்படி சமாதானம் செய்வது? அப்பொழுதே யோசிக்க தொடங்கினோம்… கதை பிறந்ததுJ

6 மணிக்குள் போகவில்லை எனில், ஊசிப் போடுவார்களே… என்ன செய்ய என்று பேசத் தொடங்க… அம்மு ஏன் என்று கேட்க… கேள்வியை எதிர்ப்பார்த்திருந்தாலும்,பதில் சொல்லும் பொருப்பை தேவா ஏற்றுக் கொண்டார். விலங்குகளிடமிருந்து ‘Infection’ நமக்கு பரவாமல் தடுக்க இந்த ஊசி… என சொல்ல, அடுத்த கேள்வி பட்டென்று வந்தது.காலையில் ‘Infection’ வராதா?மாலையில் மட்டுமே வரும் என்று சொல்லி,ஊசிப் போட்டுக் கொள்வதென்றால் பரவாயில்லை.நாங்கள் போட்டுக் கொள்வோம்.அம்முக்கு வலிக்குமே.. என்று மாறி மாறி தேவாவும் நானும் சொல்ல… அப்போ என்ன செய்ய என்று அழும் குரலில் வலது கையின் சுண்டு விரலை நீட்டி ‘கட்டி’ என சொல்ல பாவமாய் இருந்தது.உண்மையை புரிந்து கொள்ளும் நிலையில் குழந்தை இல்லாததனால்,இத்தனை கதைகள் தேவைப் பட்டது.

சமாதான பேச்சுத் தொடர்ந்தது.. அப்போ இப்படி செய்யலாம்..போய் பார்க்கலாம்.ஊசி போடறதா இருந்தா, நம்ம சனிக்கிழமை கண்டிப்பா வேற zooக்கு போகலாம்.இல்லன்னா இன்னைக்கே போகலாம் என்று சொல்ல… உறுதியா என்று வாக்குறுதி பெற்றுக் கொண்டு ஒரு வழியாய் அம்மு சமாதானமானாள்.

தெரியாத சாலை… இரு பக்கமும் நம் ஊரைப் போன்ற விளை நிலங்கள் / பண்ணைகள் (Farms).பார்த்துக் கொண்டே வியந்தோம்.வியந்து கொண்டே பார்த்தோம்.பாலைவனத்தில் தொடர்ச்சியாய் 30-40 கி.மீ தொலைவிற்குப் பண்ணைகளைப் பார்த்தது தான் வியப்பிற்கான காரணம்.கொஞ்ச நாளில் அமீரகத்திற்குத் தேவையான காய் கனிகள் இங்கேயே விளைவிக்கப் பட்டாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை எனப் பேசிக் கொண்டே… 89.5 FMஐ மீண்டும் திட்டிக் கொண்டே பயணித்தோம்.

மாலை தேநீர் பருகுவதற்கான நேரம் நெருங்கியிருந்தது.Petrol Stationஐ கண்கள் தேடின… 8 கண்களாவது தேடிக் கொண்டிருந்தது.நாங்கள் வலது புறமாய் சென்றுக் கொண்டிருக்க இடது புறத்தில் ‘Petrol Station’ பார்த்தோம்.அங்கே அங்கே என்று குரல் வர… தேநீரின் தேவை புரிந்தது.இன்னும் கொஞ்ச நேரம் கழித்து…. நீங்க நினைக்கிறது கரெக்ட் தான்…. அனைவரின் கண்களும் விரிந்தது.கார் நின்றது.தேநீர் அருந்தினோம்…சில பிஸ்கட் பாக்கெட்களை வாங்கிக் கொண்டு…சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு..பயணத்தை தொடர்ந்தோம்.

அம்மு தூங்கிவிட்டாள்.இன்னும் எத்தனை கி.மீ போகவேண்டும் என்பதனை பார்த்துக் கொண்டே… வண்டி செல்லும் வேகத்தையும் நேரத்தையும் கணக்கிட்டுக் கொண்டே சிறிது நேரப் பயணம் தொடர்ந்தது.தேவா,மிதேஷ் ஆகியோர் இந்த விளையாட்டில் தீவிரமாய் இருந்தனர். இப்பொழுது மண் குன்றுகள் தென்பட்டன. பார்க்க அழகாய் இருந்தது. நம்ம ஊர் போல போகும் வழியெங்கும் சிறு கிராமங்கள்.’Jebel Hafeet’ என்ற மலைக்கு முன்னே சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம்.மேலே சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்காது..பரோட்டாவும் குருமாவும் வாங்கிக் கொண்டு மலையில் ஏறி அங்கே அமர்ந்து சாப்பிடலாம் என்று தேவா சொல்ல ‘OK’…சொல்லி முழுமனதாய் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.போன முறை வந்த போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாய் இருந்ததால் பாதியிலியே திரும்பி வந்ததை சொல்லிக் கொண்டிருந்தார்…

அல் ஐன் வந்து விட்டதை வளைவுப் பாதைகள் (Round About) உணர்த்த… உற்சாகம் ஒட்டிக் கொண்டது.அம்மு கண் விழித்தாள்..zoo என்று இழுக்க,zoo மூடியிருந்தது..நீ தூங்கிட்டு இருந்த என்று சொல்ல…அவளும் அப்போ கண்டிப்பா சனிக்கிழமை போகனும் என்று மீண்டும் உறுதி செய்து கொண்டு அஷயாவுடன் பேச்சு சுவாரஸ்யத்தில் இறங்கியிருந்தாள்.

பரோட்டா வாங்க இடத்தைத் தேட,கண்ணில் ஒன்றும் படவில்லை.சுற்றுலா வந்தால் ப்ரௌன் நிற போர்டைப் பார்த்தால்,சரியான தகவல் கிடைக்கும் என்று தேவா சொல்ல..’Jebel Hafeet’ செல்வதற்கான குறியீடுகளைப் பார்த்த படி பின் தொடர்ந்தோம்.செல்லும் போது தேவா பேய் கதைகளை சொல்லிக் கொண்டே வர…கூட சேர்ந்து எங்கள் கற்பனைகளையும் அவுத்து விட.. சாலையில் எங்கள் வண்டி மட்டுமே…அப்போது கையில் பேனாவும் நோட்புக்கும் இருந்தால்,2-3 படங்களுக்கு கதையும் திரைக்கதையும் கிடைத்திருக்கும்! அம்மு வீட்டுக்குப் போகலாம் என்று சொல்ல ஆரம்பிக்க…பின்னர் பேய்க் கதைகள் கைவிடப்பட்டன.

சிறிது நேரப் பயணத்திற்குப் பின்,Brown Board கண்களிலிருந்து நழுவியிருந்தது…அதோடு சேர்ந்து வழியும்.சாலையில் யாரும் இல்லை.எப்படிப் போவது…என்ன செய்வது…கேள்விகள் எழுந்தாலும் பயணம் தொடர்ந்தது.சாலை நேராக சென்று கொண்டிருந்த்து.வலது பக்கமோ இடது பக்கமோ வளையாமல் சென்று கொண்டிருந்தது சாலை.சிறிது நேரம் யாரும் பேசவில்லை.10 நிமிட பயணத்திற்குப் பின் வலது பக்கம் ஒரு கட்டிடம் தெரிந்தது.அங்கிருந்த காவலாளியிடம் வழி கேட்டு வண்டிக்கு வந்தால்,இப்போ அங்க பாருங்கண்ணா காவலாளியக் காணோம் என்று தேவா சொல்ல…நிஜமாகவே எல்லோரும் திரும்பிப் பார்த்தோம்.அப்போது தான் புரிந்தது…பேய் மற்றும் திகில் கதைகளின் தொடர்ச்சி என்று….

வழி தெரிந்து மலை மேல் ஏறினோம்.2-3 நிமிடம் மலையில் ஏறும் வரை எங்களுக்கு முன்னோ, பின்னோ, எதிரேயோ எந்த ஒரு வண்டியும் இல்லை.ஒரு வேளை நாளை ஈத் என்பதால் இன்று மலை மேல் ஏறுவதற்கு தடையோ? எங்குமே ஒன்றுமே போடவில்லையே… ஏறுவதற்கு முன்னால சொல்ல வேண்டாம் என்ற 10 நிமிட புலம்பலுக்குப் பின் முதல் காரை எங்கள் எதிரே பார்த்தோம்.அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடி மலை ஏற்றத்தைத் தொடர்ந்தோம்.சுற்றியிருந்த இயற்கையை ரசிப்பதில் மனம் லயிப்பு….எல்லாருடைய மனதும் இந்த இயற்கையை பார்க்கும் பொழுது ஒரே மாதிரி செயல்படுவது எப்படி??

காரை Barkingல் நிறுத்திவிட்டு…புகைப்படங்கள் எடுத்தோம்.உயர்ந்த நிலையிலிருந்து கீழே பார்த்து மகிழ்ந்தோம்.பேச ஆரம்பித்தோம்…குழந்தைகள் விளையாட சறுக்கு மரம்,ஊஞ்சல்,சீ-சா என ஒரு பூங்கா போல் இருக்க..குழந்தைகள் விளையாடத் தொடங்கினர்.நாங்களும் குழந்தைகளாக மாறி விளையாடிக் கொண்டிருந்தோம்.ஒரு எகிப்திய குழந்தை அஷயா அருகில் வந்து உரையாடத் தொடங்க…அஷயா அம்முவுடன் விளையாடிக் கொண்டிருக்க..அந்த குழந்தை அஷயா தன்னுடன் விளையாட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தது.பெரியவர்கள் நாங்கள் அருகில் இருப்பதை அந்த எகிப்திய குழந்தை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

 
அந்த சமயத்தில், கையில் சாப்பாடு இல்லை என்பது நினைவிற்கு வர…எப்படி சாப்பிடலாம்?கீழே போய சாப்பிட்டு விட்டு வரலாமா? மலை மேல் கொண்டு வந்து கொடுப்பார்களா என்று பலவாறு பேசிக் கொண்டிருக்கும் போது.. மற்றொரு இந்திய குடும்பம் வர..அவர்களிடம் கேட்டோம்…மலைக்கு இன்னும் மேலே போனால் கிடைக்கும் என்று சொல்ல..மேல Restaurant இருப்பதை உறுதி செய்து கொண்டு மலை மேல் பயணிக்கத் தொடங்கினோம்…

மலை மேல சாப்பிட்டோமா? இல்ல சீக்கிரமா கிளம்பிட்டோமா… அடுத்த பாகத்தில்….

Tuesday, October 30, 2012

ஈத் விடுமுறை 2012 - பாகம் மூன்று


Grand Mosque, Abudhabi
 
இரெண்டு நுழைவாயில் மூடப்பட்டிருந்தாலும் மனது மூடவில்லை… இன்னும் கொஞ்சம் முன்னேறினோம்… ஒரு வளைவை தாண்டிச் சென்ற போது வாயில் இருந்தது… திறந்து! ஒரு காவலாளி கண்ணில் பட்டார். ஆனாலும் மனிதர்களின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.வண்டியை நிறுத்துவதற்கான இடமும் கண்ணில் படவில்லை. வண்டியை நிறுத்தி காவலாளியிடம் கேட்கலாம் என்று எண்ணி நான் இறங்கினேன்.முன்னே ஒரு Taxi.. அதிலிருந்து இறங்கியவர்கள் இந்தியர்கள் இல்லை; அவர்களிடம் கேட்கலாமா என்று தோன்றிய எண்ணத்தை மாற்ற கட்டாயப் படுத்தப்பட்டேன்.. காரணம் – அவர்கள் வேறொரு Taxiயில் ஏறிக் கொண்டிருந்தனர். காவலாளியை நோக்கிய பொழுது அவர் கை அசைத்துக் கொண்டிருந்தார்… இல்லை என்கிறாரா? மனதளவிலான நம்பிக்கை மட்டும் துளிர் விட்டுக் கொண்டிருந்தது…. அருகில் சென்று அவரிடம் கை அசைத்து பேசிவிட்டு,கேட்டுவிட்டு திரும்பினேன். வண்டியில் இருக்கும் தேவா மற்றும் தாய்குலங்களின் முகத்தில் எதிர்பார்ப்பு… ‘இன்று மசூதி இல்லை’ என்ற சொல் வரக்கூடாதே என்ற கவலை… குழந்தைகளும் அதே எதிர்பார்ப்புடன்

மற்றொரு மலையாளம் பேசும் குடும்பமும் அதே நிலைப்பாடில்;அந்த வண்டியிலிருந்து இறங்கியவர் என்னிடம் பேசி விட்டு அவர் வண்டியை நோக்கி நகர்ந்தார். என்னுடன் வந்தவர்களிடம் சொல்லாமல் முதலில் அடுத்தவரிடம் சொல்லிவிட்டேனே.. 2-3 நிமிடத்துக்குள் ஏகப்பட்ட மன நிலை மாற்றங்கள்;சிந்தனைகள்.நான் கூடுமானவரை என் முகத்தை உயர்த்தாமல் நடந்து கொண்டிருந்தேன். காரினை அடைய பத்தடி தூரம் இருக்கும் பொழுது, என்னால் என் உணர்வினை கட்டுப்படுத்த முடியாமல், தலையை உயர்த்தினேன்… அத்தோடு என் வலது கை கட்டை விரலையும்… என்னுடன் வந்தவர்களுக்கு கேட்காது எனத் தெரிந்தும் ‘அடுத்த வாயில் வழியாய் செல்ல வேண்டும்’ என சொல்லிக் கொண்டிருந்தேன். கைகளையும் அசைத்துக் கொண்டு… அருகில் வந்து, மீண்டும் சொன்னேன்… அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி… என்னையும் சேர்த்து… ஏதோ நான் தான் இதற்கு காரணம் போலவும், சாதித்து விட்டது போலவும்… கடைசி ஓவரில் 18 ரன்களை இந்திய அணி அடித்து வெற்றிப் பெறுவதை தொலைக் காட்சியில் பார்க்கும் பொழுது தோன்றுமே அதைப் போல…

காரினில் ஏறி, தெற்கு வாயிலை நோக்கி சென்றோம்.ஏனோ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நினைவில் வந்தது… பல வாயில்கள் இருப்பதனாலோ ? தெற்கு வாயிலின் வழியே சென்று ‘Parking’ல் நுழைந்து காரை நிறுத்திய சமயத்தில், என்னிடம் போன வாயிலில் பேசியவர் எங்கள் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிக் கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்த மாதிரி தோன்றியது.காரிலிருந்து இறங்கி, எப்படி போக வேண்டும் என்று சுற்றும் முற்றும் பார்த்து, ‘Way to Escalator’ என்ற போர்டைப் பார்த்து அந்த வழியே சென்றோம்…

வலது பக்க கதவைத் தாண்டி சென்ற போது, ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவரிடம் வழி கேட்டு, Escalator வழியே மேலே ஏறினோம்… ஏற்றம் முடிந்த இடத்தில் ஒரு வாயில்.. வெளியே வந்தது போல் தோன்றியது ; ஆனால், உள்ளே நுழைகிறோம் என்று புரிந்தது. வலது பக்கம் மசூதியின் பிரம்மாண்டம் வரவேற்றது..அந்த வழி செல்ல தடை. அங்கே அமர்ந்திருந்த காவலாளி அரபி பேசுபவராய் இருந்தார்.கண்களால் கேள்வி கேட்டோம்.கைகளால் பதில் சொன்னார்..வாயும் பேசியது.அவரின் சொற்கள் புரியாது என்ற முடிவுடன் கேள்வி கேட்டதனாலோ என்னவோ, அவரின் கையசைவை மட்டுமே மனது கவனித்தது.இடது பக்கமாய் போக சொன்னார்.. நடக்கத் தொடங்கினோம். மேற்கூரையில்லாமல், மொட்டை மாடியில் நடப்பது போல் இருந்தது. ஆங்காங்கே செடிகள். சிலவற்றில் பூக்கள். அப்பொழுதே எங்களின் புகைப்படம் எடுக்கும் படலமும் தொடங்கியது.

இங்கே எடு… அங்கே நல்லாருக்குப் பார். அங்கே வைத்து ஒரு photo.. இந்த இடம் சூப்பர். என்ன சொல்ற ? இங்க எடுக்கலாமா என்று பேசிக்கொண்டே, ‘க்ளிக்’கிக்கொண்டே நடந்தோம். எதிரே சிலர் நடந்து வந்து கொண்டிருந்தனர்.குரங்கு மனதில் குழப்பம்.நம்மை இப்படித் தானே போக சொன்னார்கள்..இவர்கள் எங்கே போகிறார்கள் ? நாம் எதையும் பார்க்காமல் இருக்கக்கூடாது என்ற உந்துதல் அதிகமாய் இருந்தது. பின்னர் அவர்களும் நான்கடி நடந்துவிட்டு திரும்ப, நிம்மதி பெருமூச்சு. இடது பக்கம் நடந்து மீண்டும் இடது பக்கம் திரும்பி நடந்தோம். ஒரு பேருந்திலிருந்து ஆங்கிலேயர்கள் சிலர் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் புர்க்கா அணிந்திருந்தனர். நாங்கள் மசூதி போகிறோம் என்று சொன்ன போது, உள்ளே செல்லும் போது பெண்கள் புர்க்கா அணிந்து தான் செல்ல வேண்டும் என்று சொல்லியிருந்ததால், இங்கே எங்கேயாவது கொடுக்கிறார்களா என்ற சந்தேகம். அவர்கள் ‘Package Tour’ல் வந்திருப்பார்கள். அதில் கொடுத்திருப்பார்கள் என்று நாங்களே சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டோம்.

மீண்டும் இடது பக்கம் திரும்பினால், மசூதியின் முன் புறத் தோற்றம் பிரம்மாண்டமாய் தென்பட்டது. நாங்கள் ஒரு ஓரத்தில் நிற்பதாய் பட்டது. நடை தொடர்ந்தது. Square வடிவத்தில் தண்ணீர் தொட்டி… நீச்சல் குளம் போல தென்பட்டது. அருகே சென்றோம்.. தண்ணீரை தொட்டோம்.2 அடி ஆளம் தான் இருக்கும்…அதில் மசூதியில் இருக்கும் விதானத்தின் பிம்பம் தெரிந்தது.. மொத்தம் 80 விதானங்கள். உண்மை சொல்லட்டுமா ? ஒவ்வொன்றாய் கனக்கு செய்யவில்லை… வலை தளத்திலிருந்து எடுத்தது…ஒரு வழி தென்பட்டது…பலர் அதன் வழியே சென்று கொண்டிருக்க, நாங்களும் தொடர்ந்தோம்… அவர்களைப் போல, நாங்களும் வழி மறிக்கப் பட்டோம். புர்க்கா கிடைக்கும் இடத்தை கை நீட்டி ஒருவர் சொல்ல, வெளியே வந்தோம் – சுவரில் எறியப்பட்ட பந்து திரும்புவது போல. அந்த தண்ணீர் குளத்தை மீண்டும் ரசித்தபடியே வலம் வர தொடங்கினோம்…

குழுவாய் சுற்றி வரும் மனிதர்கள்.. அனைவர் முகத்திலும் தினசரி அலுவலிலிருந்து வெளி வந்த மகிழ்ச்சி – எங்களையும் சேர்த்து.அப்படியே பேசிக்கொண்டு நடந்தோம்.. 10 நிமிட நடைக்ககுப் பின் உணர்ந்தோம் – நாங்கள் வெளியில் செல்லும் பாதையில் நடந்துக் கொண்டிருக்கிறோம் என்று. அங்கிருக்கும் மற்றொரு காவலாளியிடம் கேட்க, அவர் நாங்கள் நடந்து வந்த வழியை மீண்டும் காட்டினார் செய்கையால்… கண்டிப்பாய் அவர் சொன்னது புரியவில்லை. இவ்வளவு தூரம் கடந்து வந்த பாதையை மீண்டும் அசை போட்டோம். எல்லாரும் போறாங்கன்னு அவங்க பின்னாடியே வந்துட்டோம்.. நாம முதல்ல கேட்ட இடத்துக்கு பக்கத்துல தான் இருக்கோ…என்று புலம்பியபடியே நடந்தோம்…

நாங்கள் கடந்து சென்ற தண்ணீர் குளத்திற்கு அருகில் ஒரு சின்ன பாதை… அதற்கு அடுத்தாற் போல அதே மாதிரியான இன்னொரு தண்ணீர் குளம் – அதே வடிவத்தில். முதல் குளத்திற்கும் இரெண்டாவது குளத்திற்கும் நடுவே ஒரு பாதை உள் நோக்கி சென்றது… அதன் உள் நாங்கள் சென்றோம்… மீண்டும் வழி மறிக்கப்பட்டு, பெண்கள் புர்க்கா அணிய வேண்டுமென்றும் அதற்கான பாதை அடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆண்களுக்கான உடை விவரத்தையும் தெளிவு செய்து கொண்டு, தேவா, மிதேஷ் மற்றும் நான் உள்ளே சென்று காத்திருந்தோம்… பெண்கள் உடை மாற்ற சென்றனர் குழந்தைகளுடன்… 10 நிமிட காத்திருப்பில், முகப்பில் இருந்த வடிவங்களை ரசித்த படி நாங்கள் இருக்க, உள்ளே சென்ற அதே மாதிரி வந்தனர் தேவியும் ஸ்ரீதேவியும். நாங்கள் எதிர்பார்த்த படி புர்க்கா அணிந்திருக்கவில்லை… மாறாய் துப்பட்டாவை தலைக்கு போட்டிருந்தார்கள்…

அனைவரும் மெதுவாய் உள்ளே சென்றோம்…மூடிய முகப்பு…குறுகிய நீளமான பாதை… சுவர் முழுவதும் வேலைப்பாடுகள்.தூண்கள்…மதி மயங்கி ரசித்து நின்றோம்.வியந்தபடி அந்த மூடிய முகப்பை தாண்டி வந்தோம். வெட்டை வெளி.. நடக்க ஏதுவாய் பெரிய பெரிய பளிங்கு கற்கள். திரும்பிய இடமெல்லாம் திடுக்கிட வைக்கும் பிரம்மாண்டம்… மசூதியின் தோற்றம் மெதுவாய் எங்கள் அருகில் வரத் தொடங்கியிருந்தது…இல்லை இல்லை…நாங்கள் மசூதியின் அருகே சென்று கொண்டிருந்தோம்…

செருப்புகள் வைப்பதற்கான பெட்டிகள்.. பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லையா என்று இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு அப்போது தான் வந்தவர்கள் கேட்டிருப்பார்கள்.. காலணிகலை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு உள்ளே சென்றோம். அப்போது தான் பார்த்தோம்… மசூதியின் உள்ளே நிறையபேர். இதன் வெளிப்பாடு வெளியில் ஏன் தெரியவில்லை என்று வியந்தபடி நகர்ந்து கொண்டிருந்தோம்.







எத்தனை தூண்கள்…சுவரெங்கிலும் வேலைப்பாடுகள்…அன்னாந்து பார்த்தால் பெரிய விளக்கு..கண்களுக்குத் தான் பெரிய பிரச்சனை.எதை முதலில் பார்ப்பது என்பதில் தொடங்கி எப்படி பார்ப்பது வரை… மூன்று பெரிய விளக்குகள்.கால் பளிங்கில் படவில்லையே என்ற சுரனை வருவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.கீழே கார்பெட்.. 8000 பேர் வரை உள்ளே இருந்து தங்கள் பிரார்த்தனைகளை செய்ய முடியுமாம். அத்தனை பெரிய இடம் முழுவதும் ஒரே கார்பெட்டால்… கையால் செய்யப்பட்டது. 2 லட்சத்திற்கும் மேலான முடிச்சுகளைக் கொண்டது.

ஆங்காங்கே சூரிய வெளிச்சம் படும்படி அமைக்கப் பட்டிருந்தது பிரார்த்தனை கூடம்.பிரார்த்தனை சமயங்களும் தெரிந்தது.தாஜ்மகாலைப் போன்ற அமைப்பு இருப்பதாக தாஜ்மகாலைப் பார்த்தவர்கள் கூறினர்.முற்றிலும் முகலாய கட்டட கலைப் படி கட்டப் பெற்றதாக சொல்லப்படும் இந்த மசூதி 1996ல் தொடங்கப்பட்டு 2007ல் கட்டி முடிக்கப் பட்டிருந்தாலும் 2008இல் இருந்து பொதுமக்களும் வந்து போகும் இடமாய் இருந்து வருகிறது.

பிரம்மாண்டத்திலிருந்து விடுபட முடியாமல் லயித்திருந்த தருனத்தில் வெளியே செல்லுமாறு சொன்னார்கள். மணியைப் பார்த்தால் 3.30… ஒரு திரைப்படத்தைப் பார்கும் நேரத்தை விட அதிகமாகவே செலவிட்டிருந்தோம்.ஆனாலும் காலத்தின் ஓட்டம் கொஞ்சமும் புலப்படவில்லை.3.30 முதல் 4.30 வரை பிரார்த்தனை நேரம்.வெளியே வந்து, அந்த தண்ணீர் குளத்தருகே அமர்ந்தோம்.சிறிது நேரம் அந்த வியப்பு எங்களை விட்டு அகலவில்லை.சிறிது நேரம் கழித்து அங்கிருந்து நகர்ந்தோம்… எங்கள் வண்டியை நோக்கி – வந்த வழியே. எந்த இடத்தில் வலது பக்கம் திரும்பினால் தடை போட்டிருந்தார்களோ, அந்த இடத்திலிருந்து பார்த்தால் மசூதியின் நுழைவாயில் தெரிந்தது. Grand Mosque பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள http://www.szgmc.ae/en/ என்ற வலை தளத்தை சொடுக்கவும்.

வெளியே வந்து வண்டியில் அமர்ந்து அல் ஐன் போவதற்கு முன்னால் பசியாறிவிட்டு செல்லலாம் என முடிவு செய்தோம்.

அடுத்த பாகத்தில் அல் ஐன் பயனத்தை தொடர்வோம்…

Monday, October 29, 2012

ஈத் விடுமுறை 2012 - பாகம் இரெண்டு


பயணத்தின் தொடக்கம்

காலை வீடு பரபரப்பாய் இருந்தது. பயண ஆயத்தங்கள் துரிதமாய்… குழந்தைகள் மிதேஷும் ஸ்ம்ருதியும் விரைவில் எழுந்து தயாராகினர். தேவா தன் குடும்பத்துடன் 10 மணிக்கு வந்து சேர்ந்தார்… அவர் வீட்டிலும் அமளி துமளி தான் என்பதை பின்னர் புரிந்து கொண்டோம். ஸ்ம்ருதியும் அஷயாவும் எப்படியெல்லாம் பயணத்தை கழிக்கப் போகிறோம் என்ற பேச்சுக்களில் இறங்கினர். நானும் தேவாவும் திட்டத்தை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொண்டோம்… முதலில் விமான நிலையம் சென்று, கார் எடுத்துக்கொள்வோம்… பின்னர் அபுதாபி கிரான்ட் மாஸ்க் (Grand Mosque) பின்னர் அல் ஐன் zoo, Jebel Hefet அதன் பின் மறு நாள் காலையுடன் வீடு திரும்புவதாய் சொன்னோம். என் மனைவியும் தேவாவின் மனைவியும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். ஒற்றை வரியில் இங்கே இந்த சந்தேக வரி முடிந்தாலும், இதற்கு நேரம் கொஞ்சம் வெகுவாகவே செலவு செய்யப்பட்டது.
இப்படி செய்தால் என்ன? என்ற தாய் குலங்களின் கேள்விக்கு OK என்று தோளை காது வரை தூக்கி, தலையை சாய்த்து, உதட்டைப் பிதுக்கி வடிவேலு பானியில் சொல்ல அந்த OK, பயனம் முழுவதிலுமே தொடர்ந்தது.
காலை சிற்றுண்டியை முடித்து விட்டு, 10.45 மணிக்கு கீழே இறங்கினோம்… தேவாவின் வண்டியில் விமான நிலையம் நோக்கி பயணித்தோம்.
எங்கப்பா போறோம் ? என்று மிதேஷ் தொடங்க, முதல்ல விமான நிலயம் என்றவுடன் ‘ஏய்….’ என்று நக்கலாக சொல்லிவிட்டு, ஒழுங்கா சொல்லுப்பா என்றான். மீண்டும் விமான நிலையம் என்ற வார்த்தை கேட்டு, போப்பா என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான். அவனிடம் பின் முழு திட்டத்தையும் விவரிக்க வேண்டியதாயிற்று.
10 நிமிட பயணத்திற்குப் பின், ஏம்ப்பா, அந்த பேக் எடுத்தீட்டீங்களா என்று தேவி கேட்க, என் பையன் இல்லை என்பதை ஆம் என்று சொல்வது போல் தலை அசைக்க, தேவா, திருப்பு வண்டிய என்றதும், மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்தோம். நம்ம ஊரா இருந்தால், அப்படியே திருப்பி இருக்கலாம்…. இல்லையே…. என்று சிவாஜியின் பானியில் சொல்லி நாங்களே சிரித்துக் கொண்டோம். ஒருவழியாய், அந்த பேக் எடுத்துட்டு ஆரம்பித்த இடத்திலிருந்து தொடங்கினோம்.
விமான நிலையம் அருகில் வந்ததும், தேவா அலை பேசியில், வாடகை கார் கம்பெனியை அழைத்து நாங்கள் வந்து கொண்டிருக்கும் விவரத்தை சொல்லி, நாங்கள் வந்து கொண்டிருந்த வண்டியை விமான நிலைய தரிப்பிடத்தில் நிறுத்தினோம். தரிப்பிடத்தை, Parking என்று ஆங்கிலத்தில் சொல்வோம். அதை அரேபியர்கள் சொல்வதானால், Barking என்று சொல்வார்கள் ; மலையாளிகள் மூக்கினால் அதை விளம்புவார்கள்.. ஓ! பார்க்கிங் அல்லே! அது சரி!! என்று பேசி சிரித்து குதூகலத்துடன் வண்டியிலிருந்து இறங்கி நானும் தேவாவும் வாடகை கார் கம்பெனியின் இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
அலைபேசியில் கான் அவர்களை அழைத்து, எப்படி வரவேண்டும் எனக் கேட்டால், வண்டியை நிறுத்திவிட்டு வாருங்கள் என்கிறார். என்ன கொடுமை சரவணன் இது என்று பேசிக் கொண்டே, கார் கம்பெனியை தேடிக் கண்டுபிடித்து, சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு (பணம் கொடுத்து, கையொப்பமிட்டு, தேவையான தஸ்தாவேஜுகளையும் கொடுத்துவிட்டு, விதிமுறைகளை கேட்டறிந்து) கார் இருக்கும் இடத்தை அடைந்தோம். அங்கிருந்த சாரதியுடன் நான் கிளம்ப, எங்கு வரவேண்டும் என்று தேவா அறிவுறுத்திவிட்டு, நாங்கள் வந்த வண்டியை எடுக்க தேவா கிளம்பினார். வேறிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, வாடகை காரில் எங்கள் பயணம் அபுதாபியை நோக்கி….   
இதெல்லாம், ஒழுங்கா Plan செய்யக் கூடாதா என்று என் மனைவி தேவியும் தேவாவின் மனைவி ஸ்ரீதேவியும் வினவ, (40 நிமிடம் அடுத்து என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாமல் வண்டியில் அமர்ந்திருந்ததன் விளைவு) முன் தின நடப்புகளை சுருக்கமாய் விவரித்துக் கொண்டே மெதுவாய் கிளம்பினோம். (முதல் பாகம்…. ஆங்… அதேதான்…) போகும் வழியில் முதல் Petrol Stationல் வண்டியை நிறுத்தி தேநீர் அருந்த முடிவு செய்தோம். முடிவு நம் கையில் இல்லையே…. ஒவ்வொரு petrol stationஐயும் தாண்டிய பிறகு தான் பார்த்தோம்… போகும் வழியில் வீடுகள் இருந்ததைப் பார்த்து, இங்கு யாராவது இருக்கிறார்களா என்று கேள்வி பிறந்து, பின்னர் இருப்பவர்கள் எப்படி தங்கள் தேவையை சமாளிப்பார்கள்? என்று அவர்களுக்காய் கவலைப்பட்டு….
இடையில் ஸ்ம்ரிதி முதலில் zoo போக வேண்டும் எனத் தொடங்க, சமாதானப்படுத்த நாங்கள் பட்டபாடு…. உஸ்… . Zoo வழியில் இல்லை… முதலில் அபுதாபி போய்விட்டு பின்னர் zoo போகலாம் என்று அனைவரும் பலவாறாய் பேசி…. எப்பா….! (பெருமூச்சு தான்…)
போகும் வழியில் பாலைவனம்… இரெண்டு பக்கமும். இங்க 4 ஏக்கர் வாங்கிப் போடலாமா என்று கேள்வி கேட்டு, வேண்டாம் என்ற பதிலை நாங்களே கூறிக்கொண்டு…. UAEல மின்சாரம் எப்படி சமாளிக்கறாங்க? என்ற பதில் தெரியாத கேள்விகளை கேட்டுக் கொண்டு…. இருக்கும் ஒரே தமிழ் FM 89.5… அதுவும் துபாய் தாண்டினா காத்து தான் வந்தது… மிச்ச வானொலி நிலையங்கள் அனைத்திலும் பாடல் கேட்கிறது ; தமிழ் பாடல் மட்டும் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் கொஞ்சம் 89.5 FM அலைவரிசையை திட்டிக் கொண்டே பயணம் தொடர்ந்தது. 89.5 FM அலைவரிசை இதை கவணிக்குமா ??
அனைவரும் பேசிக்கொண்டே ஒரு வழியாய் தேநீர் அருந்த வண்டியை நிறுத்தினோம். சிறிது நேரம் களைப்பாறிய பின், மீண்டும் தொடங்கியது பயணம்… பேச்சுக்கள் ; கேலிகள் என்று பயணத்தைப் போல அதுவும் தொடர்ந்தது. சாலையில், மற்றொரு வண்டியில் ஒரு ஆடு போய்க் கொண்டிருந்தது…. நாளைய ஈத் திருநாளில் தான் அடுத்தவருக்கு இரையாகப் போகிறோம் என்பதை சிறிதும் அறியாமல்… பரிதாபத்தோடு அந்த வாயில்லா பிராணியை பார்த்துக் கொண்டே…..
அபுதாபியின் எல்லை எங்களை வரவேற்றது… நம்ம ஊர் போல ‘அபுதாபி நகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற பலகை இல்லை! குறை பட்டுக் கொண்டோம்… Grand Mosque எங்களின் இடது புறத்தில். வெளியிலிருந்து பார்த்தோம்… எப்படி சென்றடைவது… நான்கு பேரிடம் வழி கேட்டு… U Turn செய்து, நேராக சென்று ஒரு பாலத்தில் ஏறி, இறங்கும் போது இடது பக்கமா வலது பக்கமா எனக் கேட்டுக் கொண்டே, இடது பக்கம் வளைந்து…
மசூதியின் வாயில் தெரிந்தது. ஒரு சின்ன இல்லை பெரிய அளவில் தயக்கம்… விடுமுறை நாள் – ஒருவரும் கண்ணில் படவில்லை. 2 நுழைவாயில்களைப் பார்த்தோம்… 2ம் திறந்திருக்க வில்லை. இன்னும் எத்தனை நுழைவாயில்கள் இருக்கு? திறந்திருக்கா இல்லையா? ஒரு வேளை இன்று அடைப்போ? அடைபட்டிருந்தால், என்ன செய்வது ? இவ்வளவு தூரம் வந்த பயணம் Wasteஆ?? வெளியிலிருந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு சென்று விட வேண்டியது தான்… உதடுகள் சொன்னாலும், மனதில், மசூதியின் உள்ளே போக முடியாததை எண்ணி வலி…
நுழைவாயில் மூடி தான் இருக்கு… இங்கேயே நிற்பதில் எந்த வித பயனும் இல்லை… மசூதியை ஒரு முறை சுற்றி வருவோம்… ஏதாவது வழி இருக்கும்… மனதில் நம்பிக்கை லேசாக துளிர்விட்டுக் கொண்டுதான் இருந்தது…கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய இந்திய அணியை பார்க்கும் போது இருப்பது போல்….
இந்தியா வென்றதா ? மசூதியின் உள்ளே செல்ல முடிந்ததா? யாரும் பேசிக் கொள்ளவில்லை… அடுத்த பாகத்தில் தொடர்வோம்……….





Sunday, October 28, 2012

ஈத் விடுமுறை 2012 - பாகம் ஒன்று





ஈத் விடுமுறைக்கு முன்னதான மனநிலை....
 
 
24 அக்டோபர், 2012 மாலையிலிருந்தே மறு நாளிலிருந்து தொடங்கும் 3 நாள் விடுமுறையை கழிக்கும் ஆர்வத்தில் மனது… மாலை சுமார் ஐந்து மணியளவிலிருந்து அலை பேசி தொடர்பில் நண்பன் தேவாவுடன்….

தேவாவின் குடுமபமும் என் குடுமபமும் சேர்ந்து இந்த ஈத் விடுமுறையில் அபுதாபி மற்றும் அல் ஐன் போய் வரலாம் என்று பேசி வைத்திருந்தோம். கடந்த காலத்தில் வருங்காலம் பற்றிய பேச்சுக்கள் இருந்ததை ஏனோ மனது நினைத்தது. அலை பேசியில் அழைத்த முதல் முறை நன்பனிடமிருந்து ஏற்பு இல்லை. ஒரு வேளை நன்பனின் அலுவல் காரணமாய் பேசிய திட்டம் செயல் படுத்த முடியாமல் போய் விடுமோ ? மின்னலாய் தோன்றிய எண்ணத்தைப் பின் தள்ளிவிட்டு அலை பேசியில் மீண்டும் முயற்சி… 2-3 முறை கழித்து ‘ஹலோ… சொல்லுங்கண்ணா’ என்று முதல் முறையாய் தொடர்பு கொள்பவருக்கு பதில் அளிக்கும் தொனியில் நண்பனின் குரல்… சோர்வின் நெடியுடன். என்னடா ஆச்சு? நாளைக்கு ப்ரோக்ராம்…. என்று ஒரு வித தயக்கத்துடன் இழுத்த நொடியில்…  எல்லாம் நல்ல படியாய் இருக்க வேண்டுமே என்று மனது துடிக்கத் தொடங்கியது. கொஞ்சம் டென்ஷன்… வேலை இருக்கு… அப்புறம்ணா… வண்டி எடுப்பதாய் இருந்தால் 3 நாட்களுக்கு எடுக்கச் சொல்கிறார்கள்… உங்களுக்கு தெரிந்த இடத்தில் விசாரிங்க.. வேலை முடிச்சுட்டு கூப்பிடறேன்.. நானும் பாக்கறேன்… பேசலாம் என சொல்லி என் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்பை துண்டித்தான். அவனின் வேலை நெருக்கடி விளங்கியது.

எங்களின் தேவை ஒரு நாளுக்கு வண்டி. என்னுடைய ஆபிஸில் விசாரிக்கத் தொடங்கினேன். விசாரிக்கும் பொழுதில் முழு திட்டத்தையும் சொல்ல வேண்டியிருந்தது. அனைவரும் தங்களின் திட்டத்தை செயல்படுத்தும் ஆர்வத்தில் இருந்தனர். அவர்களிடம் சொல்லவும் வேண்டும்… ஆனால் கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை….. சாதாரண நேரத்தில், தங்கள் முழு கவனத்தையும் அடுத்தவர் சொல்வதில் வைக்கும் சிலர் கூட, அன்றைய தினத்தில்…. தேவையானதை சொல்லியும் சொல்லாமலும் ஒரு சிலரது தொடர்பினை வாங்கினேன். தொடர்பும் கொண்டேன். சொல்லி வைத்தாற் போல, எல்லா இடத்திலும் ஒரே பதில்… ‘இல்லை’. சரி… பார்க்கலாம்… இந்த மூன்று நாட்களும் வீட்டில் தான் போலிருக்கிறது என மனதை சமாதானம் செய்து கொண்டு, விவரத்தை சொல்வதற்கு நன்பனின் எண்ணை தட்டிய போது, நன்பனின் அலை பேசி switch off செய்யப் பட்டிருந்தது. நன்பனின் மற்றொரு எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சி செய்த பொழுது, சொல்லுங்கண்ணா என்ற பதில் கேட்டது. மனதில் ஏனோ கோபம் வந்தாலும், அப்பாட… என்ற உணர்வும் இருந்தது.

நான் பேச வேண்டியதை சொல்லத் தொடங்கினேன்… அவசரமாய் நான் பேசியதை கேட்டுவிட்டு, நான் திரும்பக் கூப்பிடறேன்.. ஒரு நம்பர் தர்ரேன்.. கால் பண்ணிட்டு சொல்லுங்க என்று தொடர்பினை துண்டித்தான். இந்த முறையும் அவன் குரலில் நெருக்கடியின் நெடி இருந்தாலும், போன தடவையை விட கம்மியாய் இருந்ததாய் பட்டது. என்னை நானே தேற்றிக் கொள்ள நானே நினைத்துக் கொள்கிறேனோ? அவனுக்கு எல்லாம் சரியாய் இருக்க வேண்டும்… சரியாகி விடும்… அந்த பொழுதில் என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு, அவன் கொடுத்த எண்ணை தொடர்பு கொண்டேன். ஒரு நாளைக்கு வண்டி இருக்கிறதென்று சொன்னார்கள். விநாடி நேர சந்தோஷம். 15 நிமிடத்திற்குள் confirm செய்ய சொன்னார்கள்… சந்தோஷம் பறந்து போனது….

பின்ன இருக்காதா… நண்பன் அலை பேசியை எடுக்க வேண்டும்… வேலை நிமித்த பளு குறைந்திருக்க வேண்டும்…. நண்பனின் அலை பேசியில் சப்தம் வந்தது. 4 முறை மணியோசை கேட்டது. ஒவ்வொரு முறையும் நெஞ்சில் தடக் தடக் என்ற சப்தம் மணியோசையை விட அதிகமாக இருந்தது. தடக் தடக் சப்தத்தில், நண்பனின் குரல் கேட்காமல் போய்விடுமோ என்ற பயம் வேறு….நண்பனின் குரல் கேட்டது. சுத்தமாய் பேசினான்.. எப்பொழுதும் போல். என்னவென்று தெரியாதெனினும், எல்லாம் சரியாகிவிட்டதா என்றேன். ஆமாண்ணா.. முடிந்தது என்றான். அவனின் நிம்மதி பேச்சில் தெரிந்தது. எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது – என் நண்பனுக்காக…. முடிவு செய்தோம். Rent a carக்கு confirm செய்தேன்.

பத்து நிமிடம் கழித்து, மீண்டும் அழைத்தான் தேவா. இந்த முறை, எப்படி காரை எடுப்பது என்பது பற்றி சம்பாஷனைகள் கார் எங்கள் வீட்டில் கொண்டு வந்து கொடுப்பார்களா? இல்லை நாங்கள் சென்று வாங்குவதா என்று… ஒரு வழியாய் நாங்களே சென்று வாங்கிக் கொள்வது என்று முடிவு செய்தோம்.

இன்னும் பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் தேவாவின் அழைப்பு. நம்பர் பார்த்தவுடன், அலைபேசியை எடுத்தேன். அண்ணா, ஒரு சூப்பர் ஆஃபர்ண்ணா… ஒரு நாள் வாடகையில், 1.5 நாட்களுக்கு வண்டி கிடைக்கும். ஆனால், வியாழன் மாலை 4 மணிக்கு எடுத்தால் சனிக்கிழமை காலை 9 மணிக்கு திரும்பக் கொடுத்தால் போதும் என்று அந்த கார் கம்பெனியின் விற்பனை பிரதிநிதியுடன் கான்ப்ரன்ஸ் செய்தான். அது வேண்டாம் என்று விளக்கிச் சொல்ல தேவாவும் அரை மனதுடன் ஒப்புக்கொண்டான்…

இரவின் மடியில் தூக்கம் நாளைய கனவுகளுடன்… எத்தனை முறை விடுமுறையில் சுற்றினாலும், சின்ன குழந்தை போல ஒவ்வொரு முறையும் அலை பாயும் மனது… அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு கிளம்புவதாய் திட்டம்…

குழந்தைகள் எழுந்திருக்க வேண்டும் ; வேகமாய் கிளம்ப வேண்டும்… தேவா நேரத்தில் வர வேண்டும்… அடுத்த நாள் என்ன நடந்தது ?? அடுத்த பகுதியில்….

Thursday, October 18, 2012

இதய விமோசனம்!!


உன் வாயிலிருந்து
உதிர்ந்த சொற்களை
பூக்கள் என்றேன்
ஒன்று சேர்த்தேன்
மாலையாய் கவிதை…

வாடாத மாலையை
உள்ளத்தில் உருவகிக்கும்
உன் நினைவுகளுக்கு
அலங்கரித்தேன்….
நிதர்சனமானது நின் நினைவுகள்!!

ஆதர்சனமான நிதர்சனம்
அரங்கேறிய தருனம்
இன்றும் தொடர…
விழிகளின் விமர்சனத்தில்
இதயத்திற்கு விமோசனம்!!

Wednesday, October 17, 2012

உள்ளிருக்கும் உன்னை...


மயக்கத்தில் திளைத்திருந்த
ஒவ்வொரு நொடியிலும்
மதியினில் மதி…

ஆண்டில் பனிரெண்டுமுறை
பிரபஞ்சம் பார்க்கும்
விண்மீனின் நடுவே
இளைப்பாறும் அம்புலியை
நித்தம் நோக்குகிறேன்
மனதோடு மனதாக!!

கண்களைத் திறந்தாலும்
காட்சியில் நீ வேண்டி
தீராத வேள்வி
விழி மூடி…

மனதில்லை...
இமை திறந்து
தவத்தை கலைத்திட..
உள்ளிருக்கும் உன்னை
உள்நோக்க
மூடியே இருக்கட்டும்
முன்னிரெண்டு கண்கள்!!
 
 

Monday, October 15, 2012

ஐம்புலனும்....


விழியில்… என் விழியில்
நீ விழும் வரை
இமை திறக்காதிருந்தேன்….

உன் மதுரத்தமிழ்
செவியில் ஒலிக்கும்வரை
காது கேளாதிருந்தேன்…

பிறநாற்றம் நாடாமல்
நின் சுவாசம் தேடி
மூச்சை அடக்கியிருந்தேன்…

உன் பெயரினைமட்டும்
உச்சரிக்கும் இச்சையுடன்
பிறருக்கு ஊமையாயிருந்தேன்…

உனையின்றி யாரையும்
தொட்டிடத் தயங்கினேன்…
காற்றைத் தீண்டாமல் ?

ஐம்புலனின் சங்கல்பம் ?
நிலை குலைந்தேன்
ஐயத்தில்
மயக்கம் தெளிந்தது
மறு நொடியில்…
நினைவினில் நெஞ்சத்தில்
நிறைந்த நீதானே
என்னைச் சுற்றி
காற்றினிலும்!!

Wednesday, October 3, 2012

உயர்வின் வாசம்!!


அடுத்தவர் மேன்மையை
அ முதல் ஃ வரை
அலசிடும் உயிரினமாய்…
மனிதத்தின் மனப்போக்கு….

தன்னை தாழ்த்தி
தன்மானம் அழித்து
தரம் குறைந்து
தடுக்கி விழுந்து…

இளப்பமில்லை
எவர்க்கும் எந்நாளும்
எழுவாய் என்னினமே…
நவிரம் தவிர்ப்பாய்…

உணர்ந்திடு முழுமையாய்
உள்ளார்ந்த தகுதியை…
உன்னை வரவேற்கும்
உயர்வின் வாசம்!!

Tuesday, October 2, 2012

உதட்டோரப் புன்னகை!!


உன்னுடைய நினைவுகளால்
உள்ளம் நிறைந்திருக்கும்
உன்னத பொழுதுகளில்
உதட்டோரப் புன்னகை
என்னையும் அறியாமல்….

திரும்ப கிடைக்குமா
நினைவுகளுக்கு காரணமான
மணித் துளிகள் ?
ஏக்கத்தில் மனது…

முன்னே நாமிருந்த
பரவச நிலைக்கு
இனிய பயணமாய்
மீண்டும் மீண்டும்…

உணர்வின் பரிமாற்றம்
விழிகளின் வாயிலாய்…
ஏகாந்த நிலையில்
இருவரும் ஒருவராய்!

இமையின் சுமையை
இறக்கிய தருனத்தில்
உண்மையை உணர்ந்தேன்…
உதட்டோரப் புன்னகை
என்னையும் அறியாமல்….

கனவிலும் நீ….
அருகிலும் நீ!