Sunday, September 30, 2012

காதலாய் லயித்து


உன்னுடன் நான்…
என்னுடன் நீ…
மொழிந்தன கண்கள்
உள்ளத்தின் வழிமொழிதலோடு
பிரமிப்பூட்டியது
புரிதல் கலந்த அன்பு!

வார்த்தை கற்களால்
செதுக்க முயன்று
சிற்பியாய் தோல்வி!
உறவின் உணர்வை
சிலையாய் சிறையில் ?

வாழ்க்கையின் போக்கில்
உறவில் விரிசல்
இருவரில் ஒருவரால்…
இயற்கையின் இம்சை!
விரிசலின் உச்சம்
இதயத்தில் பிளவு…

உடைந்த மனதின்
ஒவ்வொரு கூறிலும்
அன்பு நெஞ்சை
அனைக்கும் வலி
காதலாய் லயித்து
காதலாகவே…..

Monday, September 24, 2012

முயற்சியின் கை!!


மகிழ்ச்சியின் மடியில்
சிரம் வைத்து
கலைவே இல்லா
விழி மூடல்….
மனிதத்தின் தேடல்!

 
மூடிய இமையினை
சட்டை செய்யாது
இரக்கம் இல்லா
ரேகையாய் கவலை…
மனதினில் தொல்லை!
 
சம்பவமும் எண்ணமும்
பிரசவிக்கத் தவறியதால்
பகுத்தறிவை பாராமல்
முற்றடுப்பு முன்மாதிரி..
சங்கடமாய் வாழ்வாதாரம்….
 
இடையூறை இடித்திட
பகடை உருட்டி
பலனும் கண்டேனென
முடியுமா பறைசாற்ற ?
முத்திரையாய் எதிர்பார்ப்பு..
 
வாழ்வின் பாதையில்
தடைகளைத் தகர்க்க
முயற்சியின் கையை
முன்னே நிறுத்து
நம்பிக்கையாய்!!

Sunday, September 23, 2012

காதல் மொழி


உன் உயிர் நான்
என்னை கேட்காமலே
உனதாக்கிவிடு
என்னை!
என்ன தயக்கம் ?
கண்களால் கேட்டாய்…

என்னை நானே
எனதாக்குவது எப்படி ?
நீ தானே நான்….
எண்ண ஒட்டம்…

புருவம் உயர்த்தி
புரிதலோடு புன்சிரித்தாய்…
அர்த்தம் அறிந்தேன்
அதை நீயும் உணர்ந்தாய்…

அடுத்தது என்ன?
ஒன்றும் புரியாமல்
இருவரும் இருந்தோம்…
மௌனமாய் பேசிக்கொண்டே...

மனதை படித்து
விழி பேசும்
உன்னதமான
காதல் மொழியில்
உருக்கமாய் லயித்து!

Thursday, September 20, 2012

உறவின் எதிர்பார்ப்பு ?!


 
இக்கரையில் நின்று
அக்கரையில் நிகழ்த்த
இச்சை மனதில்…
இம்சை தொடங்கும்
நிராசையாகும் நொடியில்…
 
கோபத்திற்கு வரவேற்ப்பு
ரத்தின கம்பளம் விரித்து!
நிபந்தனை உறவு
நிசப்த உறவாய்…
கோபத்தின் சப்தத்தோடு…
 
உருவம் இல்லா
உக்கிர தாண்டவம்
உகந்த உறவை
உச்சந்தலையில் மிதித்திடும்…
 
என்றென்றும் உறவிற்கு
எமனாய் இருப்பதால்
எட்டி உதைத்திடுவோம்...
எதிர்பார்ப்பின் ஏகாதிபத்யத்தை!

உறவின் எதிர்பார்ப்போ ??!!

Tuesday, September 18, 2012

காரணிக்கு தீர்ப்பு....


 
 
கடமையில் தடுமாற்றம்…
நியாயம் கற்பிக்க
முகாந்தரம் தேடும்
முழுமையான பிடிவாதம்!

தன்தவறை காக்க
தர்க்கரீதி சொற்கள்
தவறாத தேவை…
காரணத்தின் ஆராய்ச்சி!

காரணி கிடைக்காமல்
காத்திருக்கும் காலத்தில்
ஏதாகும் பொய் பேசினால் ?
எண்ணங்கள் மனதளவில்…

எண்ணத்தின் வெற்றி
மெய்யை புறந்தள்ளும்
புரட்டான நடிப்பு
குடியேறும் அகத்தில்…

குடியேறியது கபடனானதால்
கிருமிகள் நஞ்சாய்
தலை விரித்தாடும்..
கூகிளில் காரணிகளுடன்...

கூகிளில் தேடி
கருமத்தை காத்திட
காரணிக்கு தீர்ப்பு
மரணம்…..
மேல்முறையீட்டின் உரிமையின்றி….

Monday, September 17, 2012

சுவாசமே நீ!!


காலம் கரைத்த
சுகம்
என்னுள் முழுவதுமாய்
உன்னாலே உன்னாலே!

உன்னுடன் இருக்கும்
உன்னதமான மணித்துளிகளை
மறவாது மாற்றிடுவேன்
நீங்காத நினைவுகளாய்!

என்னுடன் நீயில்லா
நொடியைத் தேடி
தோற்றுவிட்டேன் தேடலில்…
அதோடு உன்னிடமும்!

நீயின்றி நானா??
அதெப்படி ?
சேமித்த உன் நினைவுகளால்
சுவாசமே நீதானே!!

Sunday, September 16, 2012

விழியோடு விழி!!


விழியோடு விழி
விந்தையாய் கலந்திட்டால்
செவியும் சாய்வதில்லை
வாயும் மொழிவதில்லை
பல அர்த்தங்களின்
பரவலான பரிமாற்றம்
சுவாசத்தின் சப்தத்தோடு!!

இருவரின் சுவாசம்
இரண்டற கலந்து
இன்பத்தின் உச்சம்
விழியின் வழியாய்...!
சகலமும் மறந்திருந்தும்
உணர்வென்றும் மறக்காது
நின்றிடும்.. நிலைத்திடும்…
நினைவுகளாய் நெஞ்சத்தில்
நீங்கவே நீங்காமல்!!

தனியாய் தவிக்கும்
தருணம் எதிலும்
விழி விழுங்கிய
விழியை இமையால்
இறுகத் தழுவு…!
மூடிய விழியிலும்
விழிகள் விருந்தாகும்
சுவாசத்தின் சப்தம்
பின்னயில் இசையாய்
மாறவே மாறாமல்!!

Thursday, September 13, 2012

தவறு....


தவறின் மடியில்
தவறாமல்
மனிதம் ஒவ்வொருவரும்….
தடுக்கவும் முடியாது…
தவிக்கவும் வேண்டாம்…

நிச்சயமான தவறை
நியாயப் படுத்த
நித்தம் சத்தம்…
மாறாய்
மதி கெட்டு
மயக்கத்தின் உச்சியில்
மறுக்கும் முறுக்கு…
இல்லையேல்
இவன் அவனென
இரக்கமின்றி விரல்நீட்டி
இன்னா செய்தல்…

செய்த தவறை
தவறென்று ஏற்பதில்
தவறென்ன??
மனதோடு ஒன்றி
மன்னிப்பு கேட்டால்
மானமா போய்விடும்??
கடுகாய் தவறோ
காடாய் தவறோ
கற்றுக் கொள்ளலாம்
கடலளவு…

இதுவரை நடந்த
இடைவிடா தவறை
இனிமேலும் செய்யாமல்
இனமிது… மனித இனமிது
இருமாப்புடன் தவிர்த்தால்
இனிது இனிது
இப்பொழுதும் இனிது
எப்பொழுதும் இனிது!!

Wednesday, September 12, 2012

காதலின் சுவாசம்




காற்றில் கீதம்
காதலாய் ரீங்காரமிட
மூடிய விழிகளை
மனமில்லை திறப்பதற்கு…
அருகில் நீ இருந்தும்!

அணுக்களின் ஏற்பா ?
அனுபவத்தின் பாடமா ?
கண்டிப்பாய் தெரியவில்லை…
சத்தியமாய் புரியவில்லை…

ஒற்றைக் கண்ணால்
ஒளிந்(த்)துப் பார்க்கவா?
ஓடிய எண்ணத்தை
ஒரே நொடியில்
வதம் செய்தேன்…

பார்ப்பதின் வெளிப்பாட்டால்
துணிந்தேன் அல்லன்…
துரத்திட சுகத்தை!

பார்க்கும் பாக்கியம்
பரவாயில்லை இழந்தாலும்…
கேட்கும் சுகம்
கேடில்லை கெட்டாலும்…

மனதின் உதவியை
நாளும் நாடினேன்
உணர்தலின் மூலமாய்
நோக்கவும் செவிசாய்க்கவும்
அதோடு சேர்ந்து
சுவாசமான காதலை
சுகமாய் சுகித்திட!!

Tuesday, September 11, 2012

நெஞ்சினில் நிஜமாய்!!


உன்னுடன் இருக்கும்
உன்னத நிமிடங்களில்
உச்சரிக்க தயங்கும்
உதடு…
பிரிய மனமின்றி!!

நீ இல்லாத
இரவின் மடியில்
இரக்கமின்றி மூடுவதில்லை
இமை…
கண்ணுக்குள் நீ!!

காதலான மொழி
கவிதையாய் கேட்டிட
பேச வேண்டாம்….
நெஞ்சினில் நிறைந்திரு
நினைவாய் இல்லை…
நிஜமாய்!!

Thursday, September 6, 2012

உன்னுள் நான்



என் கண்ணில்
நீ வரும்
ஒவ்வொரு நொடியும்
எழுதாத கவிதை!

உன் விழியில்
நான் எப்போது?
உருகும் மனதை
உணர்வாயோ நீ?

பொய் சொல்லாதே
பொல்லாதவனே…
பிம்பம் காட்ட
கண்ணாடி இல்லை….
என்னுள் இருந்து கொண்டே
எழுதாத கவிதை
எப்படி ?

சொன்ன வார்த்தை
செவியில் விழுந்து
சென்றமர்ந்தது மூளையில்
எழுதிய கவிதையாய்!!

Wednesday, September 5, 2012

தொட்டனைத் தூறும் மனற்கேணி


 
முதன் முறையாய் பள்ளிக்குச் சென்ற நாள் நினைவிருக்கிறதா? என்ன செய்தோம் ? தாயையும் தந்தையையும் சகோதர சகோதரிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நாம், ஒரு புது சமுதாயத்தைப் பார்த்தோமே….புதிய சூழல்… புது நண்பர்கள்… வழி நடத்த பெற்றோர்கள் அல்லாது வேறு ஒருவர்.

பள்ளி செல்லும் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் முன்பிருந்தே…. ‘நீ பள்ளிக்கு போக இருக்கிறாய். அங்கு ஆசிரியர் இருப்பார். உன் வயதில் நிறைய பேர் இருப்பார்கள். நல்ல படி. ஆசிரியர் சொல்வது போல் கேள்’ என்று தொடங்கி நம்மை தயார் செய்திருப்பார்கள். இதைத் தான் நம் குழந்தைகளிடத்தே நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

ஞாபகம் வருதா??

ஆசிரியர் சொல்வது எதுவாக இருப்பினும் கேட்க வேண்டும். இது தானே நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாய், வீட்டில் பெற்றோர்கள் ஏதாவது சொன்னால், ‘அப்படியில்லை அம்மா…இப்படித் தான் செய்யனும். எங்க டீச்சர் இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க’ என்று எவ்வளவு விவாதம் செய்திருப்போம். அம்மா சொல்றேன்… இப்படி செய் என்று கூறும் போது… ‘தப்பும்மா. டீச்சர் சொன்னபடி செய்யலைன்னா அடிப்பாங்க’ என்று பிடிவாதம். அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கும் போது, ஏன் என்று தெரியாமல் சினுங்கி பின் அம்மா சொல்வாங்க ‘சரி சரி அப்படியே செய்’….

அந்த ஆசிரியர் என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க ? கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், எழுத, படிக்க, மொழி, இலக்கியம், கனிதம், அறிவியல்…. நமக்கு இன்று என்னவெல்லாம் தெரியுமோ அதெல்லாம் அந்த ஆசிரியர்கள் அன்று போட்ட பிச்சை. ஆரம்பத்தில், ஆசிரியர் சொல்லிக் கொடுத்தது ஆச்சரியத்தை கொடுத்தது… இவ்வளவும் தெரிந்தவரா என்று வாய் பிளக்க வைத்தது. தெளிவினை கொடுத்தது.

ஒரு கால கட்டத்தில், ஏன் இவர் இத்தனை வேலை கொடுக்கிறார் ? என்ற அங்கலாய்ப்பு இருந்தது. நாம் விளையாடப் பிறந்தோம்…இவர் படிக்கச் சொல்லுகிறாரே என்ற ஆதங்கம். இதே நிலையில் காலம் கடந்து கொண்டிருக்க, சட்டென்று ஒரு நாள் கரும்பலகை முன் அமர்ந்து படிக்கும் கல்வி காலம் முடிந்தது என்று சொன்ன போது, முதன் முறையாய் மனதில் கவலை… அடுத்தது என்ன ??

வெளியுலகம் காணத்தொடங்கி, வேலை தேடி, பின்னர் வேலையில் சேர்ந்து….. அன்று நம் எண்ணம்.. படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் கொஞ்சமும் தொடர்பில்லையே. சில நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் தேவைப்பட்டது உண்மை விளங்க… பார்க்கும் வேலையை படித்த படிப்பின் நேரடி தேர்வாய் பார்த்தோம். அது நேரடி தேர்வல்ல ; இதுவரை நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்டதன் விரிவாய் வாழ்க்கை பாடம்… அதனைப் படிக்க நம் பள்ளி / கல்லூரி கல்வி அடித்தளமாய் அமைந்தது என்பதனை நாம் விளங்கிக் கொள்ள!
 
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
திருவள்ளுவர் அன்று சொல்லியிருந்தாலும், நாம் இந்த குறளை ஆசிரியர் சொல்லி கேட்டிருந்தாலும், வாழ்க்கைப் பாடமாய் நாம் உணர்வதற்கு அனுபவம் அவசியமானதாயிற்று.

அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஆசிரியர்களை அன்றாடம் நினைத்துப் பார்ப்பது….. நடைமுறைக்கு அப்பாற்பட்டது. ஆனால், இன்று ஒரு நாளாவது ?? செய்யலாம் தானே…. மெழுகாய் உருகி நமக்கு வெளிச்சம் கொடுத்த ஆசிரியர்களுக்கு, சிற்பியாய் நம்மை செதுக்கியவர்களுக்கு, நாம் இன்று இருக்கும் நிலைக்கு காரணமானவர்களுக்கு  ‘நன்றி’ என்ற சொல் கொச்சையாய் இருக்கும்.
மனதிலே ஒரு இடம் அவர்களுக்கு ?
 
பெரிய மனது நமக்கு. செய்யலாமே!!


 
 

Tuesday, September 4, 2012

கல்லறை


சந்தர்ப்பம் இருந்திருந்தால்
சர்ப்பமும் என்வசம்
சாவகசமாய் எதிர்பார்ப்பு

வாய்ப்பு என்றும்
நிகழ்வதில்லை தற்செயலாய்…
நிகழ்த்த வேண்டும் தன் செயலால்!!

உறவினில் கூடிடும்
உற்சாகத்திற்குத் தடை
‘உம்’ சொல்ல அச்சம்

மிரட்சி மீதமிருந்தால்
தொடர்பெல்லாம் தூரம்…
துக்கத்தை துரத்த அச்சம் தவிர்!!

முற்றும் தெரிந்திருந்தும்
முத்தாய்ப்பாய் காத்திருந்து
முடிவெடுப்பதில் தாமதம்

ஊசலாடும் மனதினால்
ஒத்திவைக்கப்படும் தீர்மானம்…
திடமான தீர்வு தீர்த்திடும் சங்கடத்தை!!

வாழ்வின் இறுதியில்
வருத்தத்தின் காரணியை
எண்ணி எண்ணி ஏங்காமல்
காரணத்துக்கு கல்லறை
இக்கனமே கட்டுவோம்!!

Monday, September 3, 2012

சொ(செ)ல்லாத காதல்...


மனதில் என்றும்
மங்கையின் நினைவுகள்…
உறக்கத்திலும் உறங்கவில்லை!

விழியில்… என் விழியில்
அவள் விழும் வரை
இமை திறக்காதிருந்தேன்….

அவளின் மதுரத்தமிழ்
செவியில் ஒலிக்கும்வரை
காது கேளாதிருந்தேன்…

பிறநாற்றம் நாடாமல்
மங்கையின் சுவாசம் தேடி
மூச்சை அடக்கியிருந்தேன்…

பேதையின் பெயரினைமட்டும்
உச்சரிக்கும் இச்சையுடன்
தெரியும்வரை ஊமையாயிருந்தேன்…

உடலை என்செய்வேன் ?
அந்தரத்தில் இருந்தாலும்
காற்றை தீண்டுவேனே….

சட்டென்று முடிவெடுத்தேன்…
காதலை சொல்லிவிட்டால் ?
என்னுள் இருக்கும் உணர்வு
அவளிடமும் இருக்குமே…
 
ஐம்புலனையும் செயல்படுத்தாது
நான் இருந்தேன்… சுயநலத்துடன்…
நங்கையையும் நோகடித்தேன்…
 
ஞானம் பெற்று
காதலை வெளிப்படுத்தினேன்!!
சொல்லப்படும் வரை - காதல்
செல்லாத காதல் தான்….

Sunday, September 2, 2012

விடியலை நோக்கி!!


கதை கேட்கும்
குழந்தையிடம்
கதைக்க நேரமின்றி
கதையடிக்கிறோம்…
சொல்லாமல் இருக்க….
கதை சொல்லாதிருக்க….

சேமித்ததாய் நினைத்த
நேரமும் காலமும்
தொலைவில் காட்சிதரும்
தொல்லைக் காட்சியில்
விரயம்!

விரைவில் நிலை மாறும்
நாளை கண்டிப்பாக….
விசும்பலோடு உறங்கிய
பிஞ்சு மனதில்
விடியலை நோக்கிய
நம்பிக்கை!