Wednesday, September 5, 2012

தொட்டனைத் தூறும் மனற்கேணி


 
முதன் முறையாய் பள்ளிக்குச் சென்ற நாள் நினைவிருக்கிறதா? என்ன செய்தோம் ? தாயையும் தந்தையையும் சகோதர சகோதரிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நாம், ஒரு புது சமுதாயத்தைப் பார்த்தோமே….புதிய சூழல்… புது நண்பர்கள்… வழி நடத்த பெற்றோர்கள் அல்லாது வேறு ஒருவர்.

பள்ளி செல்லும் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் முன்பிருந்தே…. ‘நீ பள்ளிக்கு போக இருக்கிறாய். அங்கு ஆசிரியர் இருப்பார். உன் வயதில் நிறைய பேர் இருப்பார்கள். நல்ல படி. ஆசிரியர் சொல்வது போல் கேள்’ என்று தொடங்கி நம்மை தயார் செய்திருப்பார்கள். இதைத் தான் நம் குழந்தைகளிடத்தே நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

ஞாபகம் வருதா??

ஆசிரியர் சொல்வது எதுவாக இருப்பினும் கேட்க வேண்டும். இது தானே நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாய், வீட்டில் பெற்றோர்கள் ஏதாவது சொன்னால், ‘அப்படியில்லை அம்மா…இப்படித் தான் செய்யனும். எங்க டீச்சர் இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க’ என்று எவ்வளவு விவாதம் செய்திருப்போம். அம்மா சொல்றேன்… இப்படி செய் என்று கூறும் போது… ‘தப்பும்மா. டீச்சர் சொன்னபடி செய்யலைன்னா அடிப்பாங்க’ என்று பிடிவாதம். அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கும் போது, ஏன் என்று தெரியாமல் சினுங்கி பின் அம்மா சொல்வாங்க ‘சரி சரி அப்படியே செய்’….

அந்த ஆசிரியர் என்னவெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க ? கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், எழுத, படிக்க, மொழி, இலக்கியம், கனிதம், அறிவியல்…. நமக்கு இன்று என்னவெல்லாம் தெரியுமோ அதெல்லாம் அந்த ஆசிரியர்கள் அன்று போட்ட பிச்சை. ஆரம்பத்தில், ஆசிரியர் சொல்லிக் கொடுத்தது ஆச்சரியத்தை கொடுத்தது… இவ்வளவும் தெரிந்தவரா என்று வாய் பிளக்க வைத்தது. தெளிவினை கொடுத்தது.

ஒரு கால கட்டத்தில், ஏன் இவர் இத்தனை வேலை கொடுக்கிறார் ? என்ற அங்கலாய்ப்பு இருந்தது. நாம் விளையாடப் பிறந்தோம்…இவர் படிக்கச் சொல்லுகிறாரே என்ற ஆதங்கம். இதே நிலையில் காலம் கடந்து கொண்டிருக்க, சட்டென்று ஒரு நாள் கரும்பலகை முன் அமர்ந்து படிக்கும் கல்வி காலம் முடிந்தது என்று சொன்ன போது, முதன் முறையாய் மனதில் கவலை… அடுத்தது என்ன ??

வெளியுலகம் காணத்தொடங்கி, வேலை தேடி, பின்னர் வேலையில் சேர்ந்து….. அன்று நம் எண்ணம்.. படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் கொஞ்சமும் தொடர்பில்லையே. சில நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் தேவைப்பட்டது உண்மை விளங்க… பார்க்கும் வேலையை படித்த படிப்பின் நேரடி தேர்வாய் பார்த்தோம். அது நேரடி தேர்வல்ல ; இதுவரை நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்டதன் விரிவாய் வாழ்க்கை பாடம்… அதனைப் படிக்க நம் பள்ளி / கல்லூரி கல்வி அடித்தளமாய் அமைந்தது என்பதனை நாம் விளங்கிக் கொள்ள!
 
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
திருவள்ளுவர் அன்று சொல்லியிருந்தாலும், நாம் இந்த குறளை ஆசிரியர் சொல்லி கேட்டிருந்தாலும், வாழ்க்கைப் பாடமாய் நாம் உணர்வதற்கு அனுபவம் அவசியமானதாயிற்று.

அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஆசிரியர்களை அன்றாடம் நினைத்துப் பார்ப்பது….. நடைமுறைக்கு அப்பாற்பட்டது. ஆனால், இன்று ஒரு நாளாவது ?? செய்யலாம் தானே…. மெழுகாய் உருகி நமக்கு வெளிச்சம் கொடுத்த ஆசிரியர்களுக்கு, சிற்பியாய் நம்மை செதுக்கியவர்களுக்கு, நாம் இன்று இருக்கும் நிலைக்கு காரணமானவர்களுக்கு  ‘நன்றி’ என்ற சொல் கொச்சையாய் இருக்கும்.
மனதிலே ஒரு இடம் அவர்களுக்கு ?
 
பெரிய மனது நமக்கு. செய்யலாமே!!


 
 

2 comments:

  1. சிறப்பான நாளில் சிறப்பான பகிர்வு... அருமை...

    தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
  2. ஆசிரியர்களும் மாணவர்களும் 20 வருடங்களுக்கு முன் இருந்த நிலையில் இன்று இருக்கிறார்களா?

    இது தொடர்பான பொருளில் எழுதிய ஒரு பதிவு என்பதால் இதை இங்கே பகிர்கிறேன்.

    ReplyDelete