Tuesday, April 17, 2012

காதல் என்கிற உணர்வு....


காதல் என்ற வார்த்தைக்குள் சிக்காமல் இத்தனை நாட்கள் கடந்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்….ஆனால், காதல் மனிதன் தோன்றுவதற்கு முன் பிறந்து, மரணித்த பின்னும் மடியாமல் இருக்கிறது. எத்தனை பேர் அதனை உணர்ந்திருக்கிறோம் ? பிறந்ததற்கான காரணம், தாய் தந்தையரின் காதல். பிறந்த பிறகு, நம் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் காதல் இருக்கிறது. காதல் என்கிற அந்த உணர்வு வளர்ச்சியின் வயதிற்கேற்ப, வளர்வதோ தேய்வதோ இல்லை. ஆனால், வளர்ச்சிக்கு அப்பாற்பட்டு சில சமயங்களில் வெளிப்படுகிறது. பல சமயங்களில், உணர்வாகவே உள்ளடங்கி போய்விடுகிறது.   

காதல் எப்பொழுது வெளிப்படுகிறது ? உணர்வுகளை அடக்க முடியாத போது, வெளியே வந்து தானே ஆக வேண்டும்…..அப்போ, உணர்வின் வெளிப்பாடு தான் காதலா ? கொஞ்சம் ஆழமாக பார்க்க வேண்டும்…..

நாம் பலரிடம் அன்பாக இருக்கிறோம். நாம் அன்பாக இருக்கிறோம் என்பதை பல வழிகளில் காட்டுகிறோம். சில சமயம் வெளிக்காட்ட முடிவதில்லை…அந்த சமயங்களில், நம்மால் உணர்வு பூர்வமாக யோசிக்க முடிவதில்லை. அனைவரும் இந்த நிலைக்கு பல சமயங்களில் தள்ளப் பட்டிருக்கிறோம். இதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. இதற்கான காரணம் – நம்மால் உணர்வை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற திசையிலேயே நம் எண்ணங்கள் இருக்கின்றன. உணர்வு பூட்டப்பட்டு விடுகிறது.

அதனால் தான், உணர்வின் வெளிப்பாடு காதலாகிறது. வெளிப்படுத்தாத உணர்வும் காதல் தான். அந்த சமயங்களில் காதல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத் தொடங்கி விடுகிறது – உணர்வு என்ற புனை பெயருடன்.

ஏன் இந்த உணர்வு போராட்டம் ? அதற்கு காரணமும் நாம் தான். காதலை வெளிப்படுத்தினால், அது எவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் என்கிற பயம். வெளிப்படுத்தும் சமயம் சரி தானா என்ற சந்தேகம். வெளிப்படுத்தும் விதத்தில் மனதினுள்ளே பட்டிமன்றம். விளைவு – மயான அமைதி…. உணர்வின் உள்ளிருப்புப் போராட்டம்.

இந்த சமயங்களில், அடுத்தவர் பேசுவது மூளைக்கு எட்டுவதில்லை. நாம் எடுக்கும் முடிவுகள் சுய சிந்தனையுடனோ, சொல் பேச்சுக் கேட்டோ எடுக்கப் படுவதில்லை. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று சிந்திப்பதில்லை. சுருக்கமாக சொன்னால், நாம் நாமாக இருப்பதில்லை.

உன்னுடைய இந்த நிலையையும் ஒருவர் புரிந்து கொள்வார்…காலத்தின் வளர்ச்சிக்கேற்ப, அந்த நபர் மாறுபடுவார். அந்த புரிதல் காதல். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், நாம் அறிவோம் – எத்தனை முறை நாம் அடுத்தவரின் மன நிலையை புரிந்து கொண்டிருக்கிறோம்….இன்று அமர்ந்து, விட்டத்தைப் பார்த்தோ, வானத்தைப் பார்த்தோ நாம் யோசிக்கும் பொழுது, நாம் புரிந்து கொண்ட நிமிடங்கள், நொடிகள் நம் நினைவில் நிற்கும். சில சமயம் அறிந்து…பல சமயங்களில் அறியாமல். அந்த யோசித்தல் காதல்….புரிதல் காதல்….அறிதல் காதல்…..அறியாமையும் காதல்.

எத்தனை முறை, நம் நினைவுகளால் சூழப்பட்டு, ‘அந்த’ ஒரு கால கட்டத்திற்கு பயனித்திருக்கிறோம்….இந்த நொடியை மறந்திருக்கிறோம் ? அந்த நினைவும் காதல். நினைவுகள் வருவதற்கு காரணம்…அந்த உணர்வு காதல். உணர்வினை, சொல்லாமல் சில நேரம் புரிந்து கொள்வார்கள். முக பாவம் அல்லது ‘உம்’ சொல்லும் தொனி – இது போதுமானது – உணர்ச்சியை வெளிப்படுத்த. அது சரியான நபரிடம் சரியான தருனத்தில் காட்டப்பட வேண்டும். ஆக மொத்தத்தில், வெளிப்படுத்த வேண்டும்….அல்லது உணர்ச்சி புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது தான் காதல்……

அந்த ஒரு நபருடன் இருத்தலே பல சமயங்களில் நமக்கு இன்பமாக இருக்கும். சிலருக்கு தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இரெண்டுமே காதல்!! சொல்வது சுகம் ; சொல்லாமல் இருப்பது சுமை….சுமையும் சுகமாவது காதலில் மட்டும் தான்! சொல்லாமல் இருப்பதாக நினைத்து, நமக்குள் எத்தனை முறை நம் உணர்வை வெளிப்படுத்துகிறோம் ? உணர்வினை சொல்ல வேண்டியவரிடம் சொல்லாமல், பலரிடம் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நினைவை, அந்த உணர்வை, நம்மை விட்டு அகலாமல் நாம் பார்த்துக் கொள்கிறோம்….அது தான் காதல்!

No comments:

Post a Comment