Monday, April 9, 2012

காதலும் முரணும் - பாகம் 2


முரண்கள் நிறைந்தது தான் காதல். காதலை உணர்ந்து விட்டாய்…அது யாரால் வந்தது ? யார் மூலம் முரண்களை உன்னுள் கண்டாய் ? எதனால் இந்த முரண்கள் ? உன்னால் அதனை உணரமுடிந்ததா ? அது தான் ‘காதல்’.

மூல கர்த்தாவை கணிக்க முடியாமல் திணறுகிறாய்…..ஆராய உன்னிடம் நீ இல்லை. அது தான் உண்மை!! எங்கே தொலைந்துபோனாய் நீ ? நாம் தொலைந்துவிட்டோம் என்பதே புரியாமல், நம்மால் உணரப்பட்டவை இப்போது நமக்கு புரியவில்லையே என்று தேடுகிறாயே…..அந்த தொலைதலும், தேடலும் தான் காதல்…..

காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடி…பல அர்த்தங்கள் கொடுத்து….அனைத்தும் மெய் தான் என்று தோன்றி….கடைசியில் நீர் சென்றடையும் இடம் கடல் என்பது போல்….காதல் என்றால் மகிழ்ச்சி என்று உணர்ந்தாயே…..அந்த உணர்தலும் காதல்.

காதலி என்ற கற்பனை உருவிடம் பேசுவது போல் தொடங்கி, அது கற்பனை அல்ல என்று ஒத்துக்கொள்ள முடியாமல், கூட இருக்கும் நிகழ்காலம் தான் என்ற முடிவுக்கு உன்னை வர வைத்ததே….அது தான் காதல்! அந்த நிகழ்வை கடைசி வரை சொல்லாமல் சொல்லி, புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்று படிப்பவரின் மனநிலைக்கு விட்டாயே…..தோழா….அது காதல்!!

காதலின் தன்மைகள் இவை என்று ஒரு முடிவோடு தொடங்கினாய்….பிறகு, அந்த தன்மைகள் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என தெளிந்தாய்…அந்த தெளிவும் காதல்!! பேசி கொண்டே இருக்க வேண்டியது காதலுக்கு நிபந்தனை அல்ல….என்றோ பேசிய நினைவுகள் பேசிக் கொண்டிருந்தால்….? தனிமை என்பதே கிடையாது என்ற வரம் காதலால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைக்கு உன்னை உட்படுத்திக் கொண்டாயே…..அது காதல்!!

வாழ்வில் சாமானிய மனிதன் எதையெல்லாம் நேசிக்கிறானோ, எதெல்லாம் வேண்டும் என்று கனா காண்கிறானோ, இயற்கையின் நியதியை தன் முயற்சிக்கு பாலமாக்கிக் கொள்கிறானோ….அதெல்லாம் நடக்கும்!! அதோடு சேர்ந்து, காதலியின் நினைவுகள் போதுமென்ற முடிவுக்கு வந்ததற்கான காரணம் உன்னைத் தேற்றிக்கொள்ளவா ? அல்லது, காதலியின் மனது காயப்படக்கூடாது என்பதற்காகவா??

காதலின் பார்வையினால், கவிதை மட்டும் உயிர் பெறுவதில்லை….கலக்கங்களும் காணாமல் போய்விடுகிறது….வாழ்வும் கிடைத்து விடுகிறது. கடந்து போன வாழ்க்கைக்கும் அர்த்தம் பிறந்து விடுகிறது. காதலியின் கரம் பிடித்து கனவில் போகாத தூரங்கள் போவதற்கு பதில், அந்த காதலியே அருகில் வந்து, தன் கரத்தை மட்டுமல்ல, தன்னையே கொடுத்து….நாம் வாழ்வோம் என்று கூறினால் ?? கனவுலகம் எல்லாம் நனவாக மாறிவிட்டால் ?? ஏன் நினைவுகளோடு மட்டும் வாழவேண்டும் ? காதலில் மட்டும் போதுமென்ற உணர்வு வேண்டாம் தோழா……வாழ்க்கை முடிந்து விட்டது….வாழ்வு வேண்டும்…..இது தானே காதல்!!

No comments:

Post a Comment